பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 63 வியப்பு தந்தது. எழுந்திரி. தள்ளிப்போ வண்டியை இங்கே நிறுத்தனும் என்று ஒருவன் கூவினான். எழுந்து விலகி ரோடில் நடந்தேன். மீண்டும் இருளோடு நடை தான். எவ்வளவு நேரம் ஆகியிருக்கும், எத்தனைத் தூரம் நடந்திருப்பேன் என்று புரியவில்லை. அலுப்பும் அசதியுமாக இருந்தது. ரோடோரத்தில் ஒரு புளியமரத்தின் கீழ்ப்படுத்தேன். அவ்வளவுதான். தன்னை மறந்து தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன். மீண்டும் விழிப்பு வந்த போதும் இருளாகத்தான் இருந்தது. நான் இருந்தது எந்த இடம் நேரம் என்ன இருக்கும் என்று எதுவும் விளங்கவில்லை. எழுந்து மீண்டும் நடந்தேன். விடிய விடிய நடந்து கொண்டேயிருந்தேன். ஆறு மணி அளவில் திருப்பரங்குன்றம் வந்திருந்தேன். அங்கே உள்ள பெரிய குளம் மழை பெய்து தண்ணீர் நிரம்பிக் காணப்பட்டது. ஆண்களும் பெண்களும் நீராடிக்கொண்டிருந்தார்கள். நானும் குளத்தில் இறங்கிக் குளித்தேன். சுகமாக இருந்தது. வேட்டியையும் துண்டையும் நனைத்து, அந்த இடத்திலேயே நின்று அவற்றை உலரவைத்தேன். வீட்டில் இருந்து புறப்பட்ட மூன்றாவது நாள் அன்று முதல் நாள் திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டிக்கு 35 மைல்கள் இரண்டாம் நாள் கோவில் பட்டியிலிருந்து விருதுநகருக்கு 30 மைல்கள் அங்கிருந்து மதுரைக்கு 30 மைல்கள். ஆக மூன்று நாட்களில் மதுரைக்கு நடந்து வந்தாயிற்று என்று மனம் உவகையுற்றது. இன்னும் மதுரை நகரை அடையவில்லையே என்ற நினைப்பும் வந்தது. நகருக்கு ஒரு மைல் வெளியே உள்ள அரசு கட்டிடங்களில் பல பயிற்சி நிலையங்களும் அலுவலகங்களும் இயங்கிக் கொண்டிருந்தன. அங்கே ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தில் ராஜவல்லிபுரம் உறவினர் ஒருவர் கற்றுக் கொண்டிருந்தார். முன்பு எனக்கு வேலை வாங்கி உதவியவரின் தம்பி. அவரைச் சந்திக்க வேண்டும் அவரிடம் சிறிது பணம் பெற்றுக்கொண்டு, ரயில் மார்க்கமாகக் காரைக்குடி போகலாம் என்று திட்டமிட்டது மனம். காரைக்குடியில் இந்திரா பத்திரிகை அலுவலகம் இருந்தது. அங்கே போய் முயன்று பார்க்கலாமே என்று நினைப்பு நடந்து போக முடியாது என்று நன்கு புரிந்தது. மூன்று நாட்கள் விடாது நடந்ததில் பாதங்கள் புண்பட்டிருந்தன. செருப்பு இன்றி நடந்ததால், விரல்களுக்கிடையே வெடிப்புகள் தோன்றியிருந்தன. வலியும் இருந்தது. முதலில் உறவினர் கோபாலைச் சந்தித்தாக வேண்டும். இந் நினைப்புடன் திருப்பரங்குன்றம் குளத்திலிருந்து நடந்தேன். அதே ரஸ்தாவில், மதுரை நகருககு வெளியே இருந்த பயிற்சி நிலையக் கட்டிடம் போய்ச் சேர்ந்தேன். கோபால் எங்கே இருக்கிறாரோ, அவரை எப்படிப் பார்ப்பது என்று