பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

11


அப்டன் ஸிங்க்ளர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தகப்பனார் சாராயக் கடையில் வேலையில் இருந்தார். அங்கு வேலை செய்து வந்ததன் பலனோ என்னவோ அவரும் ஒரு பெரிய குடிகாரராகிவிட்டார். இதனால் ஏற்கனவே வறுமையில் கஷ்டப்படும் குடும்பம் மேலும் அவஸ்தைப் படலாயிற்று. இந்தக்காரணத்தால் அப்டன் ஸிங்க்ளர் பள்ளிக்குக் கூடப் போக முடியவில்லை. அதனால், வீட்டில் தாயாரிடமே எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். ஆரம்பப்பாடங்களைக் கற்றதும், அவர் தன் கைக்கு கிடைக்கும் புத்தகங்களைப் படிக்கலானார். இப்படியே பெரிய பெரிய மேதைகளின் புத்தகங்களைப் படித்து முடித்தார். இச்சமயத்தில் அவருக்கு, பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உண்டாயிற்று. படிப்பில் ஓரளவு தேர்ந்திருந்ததால், அவர் உயர்தரவகுப்பிலேயே சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், பள்ளிக்கு சம்பளம் கட்டவேண்டுமே, என்ன செய்வது? இதற்காக அப்டன் ஸிங்க்ளர் மனம் தளரவில்லை. நகைச்சுவை துணுக்குகள் எழுதி பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தார். அவர் அனுப்பும் பத்துத் துணுக்குகளில் நிச்சயம் இரண்டு துணுக்குகளாவது பத்திரிகையில் பிரசுரமாகும். அதற்காக அவர்கள் அளிக்கும் சன்மானத்தைக்கொண்டே அவர் பள்ளிச் சம்பளத்தைக் கட்டி விட்டு, தம்முடைய செலவையும் பூர்த்தி செய்து கொண்டு வந்தார்.