36
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்
நன்றாக இருக்கும் மேலும், அத் தேசத்தவர்களுக்கு விருப்பமான முறையில் நயமாகவும் தயார் செய்து கொடுக்கலாம் என்று எண்ணினார். அதன்படியே பல நாடுகளிலும் பேட்டா தொழிற்சாலைகளை ஏற்படுத்தினார். இதனால் அந்தநாட்டவர் பலருக்கும் வேலை கிடைக்கலாயிற்று.
பேட்டா, தொழிற்சாலைகள் ஏற்படுத்தியதுடன் நிற்கவில்லை; நாட்டின் பல பாகங்களிலும் தங்கள் விற்பனை நிலையங்களை ஏற்படுத்தினார். இப்படிச் செய்ததின் மூலம் அவருடைய சரக்குகளை விற்க வேறு வியாபாரியைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று.
பேட்டா செருப்பு வியாபாரத்தின் மூலம் ஒரு சின்னஞ்சிறுநகரையே ஏற்படுத்திவிட்டார் என்று கூறலாம். பேட்டா செருப்புத் தொழிற்சாலையிருக்கும் பல இடங்களுக்கு ‘பேட்டா நகர்’ என்றே பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அத் தொழிற்சாலைகளின் லட்சக்கணக்கானவர்கள் வேலை செய்கின்றனர். அவர்களுக்காகவே சாமான் கடைகள், ஹோட்டல்கள், சினிமா-நாடக தியேட்டர்கள் கூட கம்பெனியின் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றன.