பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


கசாப்புக் கடைக்காரன் சமைத்துத் தந்த விருந்திலே மனித உணர்ச்சிகள் தாண்டவமாடும் நகைச்சுவை ஊற்றெடுக்கும். 1902லிருந்து 1910 வரை நியூயார்க்கிலிருந்த அந்த எட்டு ஆண்டுகளில் அவர் எழுதியவை 250 சிறு கதைகள் எல்லாவற்றிலுமே இந்த உணர்ச்சிகள் முட்டி மோதி வெளிப்படும். அவ்வளவும் அருமையான உயிருள்ள சிருஷ்டிகள். அவருடைய கதாபாத்திரங்களெல்லாம், திருடர்கள், போலீஸ்காரர்கள், கடைப்பெண்கள், காசாளர்கள், நடிகர்கள், சுருக்கெழுத்தாளர்கள் முதலியவர்கள் தான். “மனிதனின் ஒவ்வொரு உணர்ச்சியையும் ஒவ்வொரு கற்பனைக் கதைக்கும் அஸ்திவாரமாகக் கொள்ளலாம்” என்று அவர் ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

“சிறு கதை எழுதுவது எப்படி?” என்று ஒருவர் ஹென்றியிடம் கேட்டாராம். “அதென்ன பிரமாதம்? வெகு சுலபமான விஷயமாயிற்றே. கதையை எப்படி முடிப்பது என்பதை முதலில் தீர்மானித்துக்கொண்டு பிறகு, அந்த முடிவு வருவதற்கு எப்படி அமைக்க வேண்டுமோ அப்படிச் செய்தால் போதும். அவ்வளவுதான்!” என்றாராம்.