பக்கம்:வாழ்க்கை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

வாழ்க்கை


வாக்கிக் கொள்ளவும் முடியும். வேதனை வாழ்க்கையில் அவசியந்தானென்று கருதி, அதை வரவேற்றுக் கொண்டு, அதைத் தான் உணராமலே தாங்கிக் கொள்ள முடியுமென்றும், அதிலேயே இன்பமடைய முடியுமென்றும் ஒவ்வொரு மனிதனும் அறிவான். உயிரையே தியாகஞ் செய்பவர்களும், இன்பமாகப் பாடிக்கொண்டே தூக்குமேடை ஏறுபவர்களும் ஒரு புறமிருக்க, சாதாரண மனிதர்களும் தங்கள் தைரியத்தைக் காட்டுவதற்காகச் சிறிதும் முணுமுணுக்காமல் பல்லைக் கடித்துக் கொண்டு கொடிய துன்பங்களைத் தாங்குவதை நாம் பார்க்கிறோம். வேதனை அதிகரிப்பதற்கு ஓர் எல்லையுண்டு. வேதனையைப் பற்றிய உணர்ச்சியை எவ்வளவு வேண்டுமானாலும் நாம் குறைத்துக்கொள்ளவும் முடியும். ஆனால், மனிதன் தன் மிருக இயல்பையே வாழ்க்கையாக எண்ணி, எதைக் கொண்டு வேதனை உணர்ச்சியைக் குறைத்துக்கொள்ள வேண்டுமோ, அதைக் கொண்டே பெருக்கிக் கொள்கிறான்.

பிளேட்டோ[1] ஒரு கதை எழுதியிருந்தார். அதன்படி, ஆதியில் கடவுள் மனித வாழ்வு எழுபது வருடம் என்று கட்டளையிட்டிருந்தார். ஆனால், பின்னால் மனிதர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வந்ததைக் கண்டு, அவர் பழைய கட்டளையை மாற்றி, மனிதர்கள் தாங்கள் மரண மடையுங் காலத்தை அறிய முடியாமலிருக்கும்படி செய்துவிட்டார். இப்போது நாம் அதே நிலையிலிருக்கிறோம்.


  1. பிளேட்டோ - புகழ் பெற்ற கிரேக்க தத்துவ ஞானி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/161&oldid=1122389" இலிருந்து மீள்விக்கப்பட்டது