பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48. கோபமா? வேண்டாம் !

வெகுளி, சினம், கோபம் ஆகியன ஒரு பொருட்சொற்கள். எல்லா அறநூல்களுமே வெகுளியை அறவே விலக்குகின்றன. வெகுளி, பல தீய செயல்களுக்கு வழி வகுத்து விடுகிறது. சினந்து எழுவதற்குரிய சூழ்நிலைகளை வாழ்க்கையில் சந்திக்காமல் வாழ இயலாது.

ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் வெகுளாமல் இருப்பதே நல்லது. அதுவே நன்னெறி சார்ந்த வாழ்வு. கோபம் ஏன் வருகிறது? எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது போனால் கோபம் வரும்; பேராசையின் காரணமாக கோபம் வரும். வேறு சிலருக்கு இயலாமை ஏற்படும் பொழுதும் கோபம் தோன்றும். கோபம் வெறும் உணர்ச்சி மட்டுமே. கோபத்திற்கு வலிமை கிடையாது.

இந்த உலகில் அனைவருமே தங்கள்மீது அதிக ஆசை காட்டுகிறவர்கள். அவரவர்களும் அவரவர்களுடைய வாழ்க்கை மீது தனிக் கவனம் செலுத்துவது இயற்கை! பெருவழக்கும்கூட! உங்கள்மீது உங்களுக்குப் பெருவிருப்பம் உண்டா? தற்காப்புணர்வு இருக்கிறதா? அப்படியானால் கோபப்படாதீர்கள்!

ஆம்! நீண்டநாள்கள் வாழவேண்டுமா? அறிவில் சிறந்து விளங்க வேண்டுமா? ஆம் எனில் கோபப்படாதீர்கள் ! கோபம் மரணத்தின் வாயில் ! அதனால் இதயத்துடிப்பு கூடும்! குருதி கொதிப்பேறும்; இதயம் பாதிக்கும்! மரணம் வந்து சேரும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/110&oldid=1133240" இலிருந்து மீள்விக்கப்பட்டது