பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வாஷிங்டனில் திருமணம் சாஸ்திரிகளும், அம்மாஞ்சியும் பார்க்கில் ஜன நடமாட்டமில்லாத ஒர் இடமாகப் பார்த்து பெஞ்சில் அமர்ந்து கொண்டனர். சாஸ்திரிகள் தக்ளியைச் சுழற்றி நூற்க ஆரம்பித்தார். 'நீர் இங்கேயே உட்கார்ந்து நூற்றுக்கொண்டிரும். நான் கொஞ்சம் மாவிலை ஒடித்து வந்துவிடுகிறேன். நாளைக்கு இரண்டு வீட்டுக்கும் புண்ணியாகவாசனம் செய்யணும்...' என்று கூறிவிட்டுப் போனார். அம்மாஞ்சி திரும்பி வருவதற்குள் சாஸ்திரிகளைச் சுற்றிப் பெரும் கூட்டம் கூடிவிட்டது. அவர் தக்ளியைச் சுழற்றி, பஞ்சிலிருந்து நூலை லாகவமாக இழுப்பதை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். 'வாட் இஸ் திஸ்?' என்று கேட்டார் பத்திரிகை நிருபர் ஒருவர். சாஸ்திரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தபோது, நல்ல வேளையாக அம்மாஞ்சியே திரும்பி வந்துவிட்டார். சாஸ்திரிகள் தவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவர், “திஸ் இஸ் டக்ளி, திஸ் இஸ் காட்டன்' என்று அவர்களுக்கு விளக்கினார் அம்மாஞ்சி. 'இந்த த்ரெட்டை என்ன செய்வீர்கள்?" 'பூணுரல் செய்து பிரம்ம முடிச்சுப் போடுவோம்... அப்புறம் இதை பிரம்மாவே வந்தாலும் பிரிக்க முடியாது...' - "ஒரே தடவையில் அறுந்து போகாமல் எத்தனை அடி நீளம் நூல் நூற்பீர்கள்?" "எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் நூற்கலாம். ஆனால் தக்ளி தரையில் இடிக்குமே...' என்றார் அம்மாஞ்சி.