பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனையாளர் சிலர்

11

படுத்தப்பட்டன; தோல்விகளோ எவரும் அறியா வண்ணம் அமுக்கிப் புதைக்கப்பட்டன. ஆயினும் அவர் ஒரு தேர்ந்த விஞ்ஞானியே என்று யாவரும் இந்நாளில் கூட ஒப்புக்கொள்கின்றனர். கந்தக அமிலத்தை இரும்புத் துகள்மீது ஊற்றினால் நீரக வாயு (Hydrogen) வெளிப்படுமென முதலில் கண்டறிந்தவர் இவரே.

இரசாயனத்தில் உலோக மாற்றத் தத்துவம் மிக முக்கியமானது. ஓர் உலோகத்தை மற்றோர் உலோகமாக மாற்ற பலர் முயன்றனர். அந்நாளில் இத்துறையில் முயன்றவர் டாக்டர் ஜேம்ஸ் பிரைஸ் என்பவர். இவர் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். தன்னால் உலோக மாற்றம் செய்ய முடியும் என்றும், அவ்வாறாக தான் தங்கத்தை உற்பத்தி செய்திருப்பதாகவும் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அவருடைய இந்தத் 'திடீர்' முன்னேற்றத்தைக் கண்ட ஏனையோர் அவர் மீது பொறாமை கொண்டு, தம் எதிரில் அவருடைய சோதனையைச் செய்து வெற்றி காண வேண்டும் என்று வற்புறுத்தினர். பிரைஸ் அதற்குச் சம்மதித்தார். பரிசோதனை தொடங்கிற்று. பலரது முன்னிலையில் எவ்வளவு முயன்றும் அவரால் வெற்றி காண முடியவில்லை. பெரிதும் அவர் மனம் குழம்பினார். பிறருடைய இழிச் சொல்லைப் பொறுக்க மாட்டாதவராகி அன்னாருடைய முன்னிலையிலேயே பிரைஸ் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.

இனி கணிதத் துறையிலும் பௌதிகத் துறையிலும் உழைத்த விஞ்ஞானிகளைப் பற்றி அறிவோம்.