பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

விஞ்ஞானத்தின் கதை

அரிஸ்டாட்டில் கூறியதைப் பொய்யென்று நிரூபித்த இன்னொரு விஞ்ஞானி கோப்பர் நிகஸ். அரிஸ்டாட்டில் கூறிச் சென்ற "சூரியன் பூமியைச் சுற்றுகிறது" என்ற கொள்கையைக் கோப்பர்நிகஸ் நம்பத் தயாராக இல்லை. தனது வாழ்நாள் முழுதும் நன்கு ஆராய்ந்து பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று தன் மறுப்புக் கொள்கையைப் பரப்பினார். இதற்குப் பின் அவர் விரைவில் இறந்து விட்டார். அப்படி அவர் இறந்தது நல்லதாயிற்று. ஏன் தெரியுமா? கதையைக் கேளுங்கள்! இவரது மரணத்திற்கு அறுபது ஆண்டுகளுக்குப் பின் ரோம் நகரில் இவரது கொள்கைகளை ஆதரித்துப் பேசியதற்காக ஜியார்டனோ புரூனோ என்பவன் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டான். வானத்துக் கோள்களை ஆராய தொலை — நோக்கி (Telescope) யைக் கண்டுபிடித்து கோப்பர் நிகஸின் கொள்கை களுக்குத் துணை நின்றதற்காகக் கலிலியோவுக்கு அரசாங்க அதிகாரிகளின் குற்றச் சாட்டுக்களே பரிசாகக் கிடைத்தன! இவர் தனது எழுபத்தெட்டாம் ஆண்டில் இறந்தபோது இவரது புதை நிலத்தின் மீது கல்லறை எழுப்புவதற்குக்கூட தடை செய்யப்பட்டது.

கலிலியோ போன்ற விஞ்ஞானிகள் இறந்தாலும் அவரது கொள்கைகள் வாழ்ந்தன. பின்னர் வந்த விஞ்ஞானிகளிடையே எதையும் ஆராய்ந்து தெளியும் தன்மை உறுதி பெற்றது. மதவாதிகள் காட்டியதே சொர்க்க வழி என்ற கோட்பாடு தகர்த்து எறியப்பட்டது. ஆக விஞ்ஞான யுகம் உதயமாயிற்று.

———