பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3. வேளாண்மை

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"

என்ற வள்ளுவரின் ஆராய்ச்சி மொழியானது அனுபவ வழியே வந்ததாகும். வேளாண்மை தொடங்கப்பெறுவதற்கு முன்னர் இருந்த உலகுக்கும் பின்னர் உருவான உலகுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு நாகரிகமும் பிறவும் எவ்வாறு எழுச்சி பெற்றன என்பதை இங்கே ஆராய்வோம்.

மனித உலகின் தொடக்கமெனக் குறிப்பிடும் பொழுது மனிதன் விலங்குகளோடு தானும் ஒரு விலங்காக வாழ்ந்ததை நினைவு படுத்திக் கொள்வோம். ஆறாவது அறிவான பகுத்தறிவை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திராத அந்தக் காலத்தில் அவன் எதையும் கோவைப் படுத்திச் சிந்திக்கத் தெரியாதவனாக இருந்தான். இயற்கைக்கு உட்பட்டு வாழ்ந்தானே தவிர, இயற்கையை வென்று அதைத் தன் வாழ்வுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளத் திறனற்றவனாக இருந்தான். தம்மைப் பாதுகாத்துக் கொள்ள விலங்குகள் மலைக்குகைகளைப் பயன்படுத்திக் கொண்டதை அறிந்த மனிதன் தனக்கும் அத்தகையதொரு பாதுகாப்புத் தேவையே என்பதை உணர்ந்தான். மழைக்கும் வெயிலுக்கும் குகை பாதுகாப்புத் தந்தது. மழைக்காலங்களில் குகையில் தண்ணீர் தேங்கிக் கொண்டால் மனிதனின் நிலை என்ன? இதை ஆராயப் புகுந்த போது தான் மரங்களின் உச்சியிலும்