பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

விஞ்ஞானத்தின் கதை

சில விலங்குகள் வாழ்க்கை நடத்துவதைத் தெரிந்து கொண்டான். அத்தகைய இடம் தனக்கும் அமைதல் தகுதியெனப் புரிந்து கொண்ட அவன் மரக் கிளைகளில் குடியேற்றம் நிகழ்த்தினான்.

இந்தப் பருவத்தில் மனிதனின் உணவு மாமிசமாகும். பசித்த நேரத்தில் கண் எதிரில் தென்படும் விலங்குகளை வேட்டையாடி வயிறு நிரப்பும் வாழ்க்கை மனிதனின் முதல் வாழ்க்கை. மறு வேளைக்கு அல்லது மறு நாளைக்கு என்று மாமிசத்தைச் சேர்த்து வைக்க முடியாத காரணத்தால் அவ்வாழ்க்கை கவலையற்றதாக அமைந்தது. கொடிய விலங்குகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு தனக்கு உணவாகத் தகுந்த விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த வாழ்க்கை நெடு நாட்கள் நீடிக்கவில்லை.

நாளா வட்டத்தில் மனிதன் வாழ்ந்த இடத்தில் பிற விலங்குகளின் நடமாட்டம் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. காரணம்? மனிதனின் உணவாகக் கொல்லப்பட்ட விலங்குகளினின்றும் எஞ்சிய மிகச்சில அவனிடமிருந்து அஞ்சி ஓடி வேறு இடங்களை நாடிச் சென்றன. எனவே மனிதன் தன் உணவைத் தேடும் பொருட்டு விலங்குகளைத் தேடிச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. இவ்வாறு ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் சென்று அங்குள்ள விலங்குகளையும் கொன்று தின்ற பின்னால் மற்றோர் இடத்தை நாடிச் சென்றான். இப்படித்தான் மனிதனின் நாடோடி வாழ்க்கை தொடங்கிற்று.

இந்த நாடோடி வாழ்க்கையினால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன்தொடர்பு கொள்ள நேரிட்டது.