பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

விஞ்ஞானத்தின் கதை


மழை பொழியச் செய்யும் தெய்வமாக அவனைப்போற்றி வணங்கினர்; பூசனைகள் செய்தனர்; விழாக்கள் கொண்டாடினர்; எப்பருவத்திலேனும் மழை பொய்த்துவிட்டால் அதற்கான காரணம் வானம் தங்கள் மீது கோபம் கொண்டதாக எண்ணினர்; அந்தக் கோபத்தைத் தணிக்கத் தம் கூட்டத்தின் மழைத் தெய்வத்துக்குப் பலியிடுவதே உரியமுறை என்று சட்டம் வகுத்தனர்.ஆக, ஒவ்வொரு பருவத்தின்போதும் மழைத் தெய்வமாக ஒருவன் தேர்ந்தெடுக்கப்படுவதும், தேவை ஏற்பட்டபோது அவன் பலியிடப்படுவதும் பழக்கத்தில் வந்தன. இந்நாளிலும் கூட உலகின் சில பகுதிகளில் பல வேறு காரணங்களுக்காக நரபலியிடுதல் வழக்கில் இருக்கின்றது.

நாளுக்கு நாள் இயற்கையை மனிதன் தன் விருப்பம்போல் மாற்றிக்கொள்ள முயன்று வருகிறான். கோடைக்காலத்தில் குளிர்ச்சிமிக்க சூழ்நிலையை அவனால் இன்று உருவாக்கிக்கொள்ள இயலும். மழையிலிருந்து தன்னைப்பாதுகாத்துக் கொள்ளவும், மழையின் பெரும் பகுதியைப் பயனுள்ளதாக்கிக் கொள்ளவும் மனிதனால் இன்று முடியும். விமானங்களின் மூலமாகப் பனி வீசி மேகங்களைத் திரட்டி மழை நீரைப் பூமிக்கு இழுத்து வரும் சக்தி இன்று நம் கண்முன் வேலை செய்கிறது. ஆயினும் இத்துறையில் முழு வெற்றி கண்டோம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒன்று கூறலாம். விளை நிலத்தின் பரப்பு நாளுக்கு நாள் அதிகப் பயனைப் பெற்றுவருகிறது.

விஞ்ஞானிகள் வேளாண்மைத் துறையில் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடல் நீரில்