பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. நோயற்ற வாழ்வு

மோதிரங்களால் அலங்கரிக்கப்பட்ட விரல்களில் நோயும் குடிகொண்டிருந்தால் அவ் விரல்களுக்குரியவனை செல்வன் என்று நாம் சொல்வதற்கில்லை. எனவேதான் "நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்” என்ற வழக்கு நம்மிடையே இருந்து வருகிறது.

எவனொருவன் பிணிகளிலிருந்து அறவே விடுபட்டு உலகைத் தான் வாழக்கூடிய இடமாக அமைத்துக் கொள்ளும் திறனுடையவகை இருக்கிறானோ அவனே சுகவாசி. அவனது உள்ளமும் உணர்வுகளும் நியதிக்குட்பட்டு ஒரே ஒழுங்கில் நிலைக்கின்றன.

நம் ஆதி ஞானியரின் கூற்றுப்படி நம் உடல் ஐம் பூதங்களால் உருவாக்கப் பட்டது. ஐம்பூதங்கள் மண், நீர், வெறுமை, ஒளி, காற்று என இவை ஐந்தாம். கிரேக்க அறிவியலாரின் கொள்கைப்படி நம் உடல் நால்வகைப் பூதங்களால் ஆனது. அவர்கள் வெறுமையை நீக்கி மிகுதியான நான்கைக் கணக்கிட்டனர். இவற்றின் விகிதாசாரக் கூட்டுறவே உடம்பு. ஆதலின் இவற்றை ஒழுங்குற உடம்பிற்குள் நாம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். இவை பெரும்பாலும் நாம் உட்கொள்ளும் உணவு, நீர், காற்று மூலமாக ஒன்று சேர்ந்து நம்மை வளர்க்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ அமைந்தால் அப்போதுதான் நோய் பீடிக்கிறது. எனவே நோய் வாய்ப்படும்போது மருத்துவர்கள்