பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலை

53

னம் ஆகிய கலைகள் மனிதனின் முன்னேற்றத்தைப் படிப்படியாக எடுத்துக் காட்ட வல்லன.

மனிதன் விலங்குகளைக் கொன்றும், பின்னர் வேளாண்மையைத் தொடங்கி ஆற்றுப்புறங்களில் நகரங்களை உருவாக்கிக்கொண்டும் வாழ்ந்தபோது கூட்டுறவின் வலிமையை உணர்ந்திருந்தான். மிக வலிமையுள்ள காட்டு விலங்கை வேட்டையாட தனி மனிதனால் முடியாது போனதால் துணைவர்களைச் சேர்த்து வெற்றி கண்டு, பின்னர் கொல்லப்பட்ட விலங்கைப் பங்கு போட்டுக்கொள்வது பழக்கமாயிற்று. இப்படிக் கூட்டங்கள் பல அங்கங்கே காடுகளில் உருவாகி அக் கூட்டங்களுக்கு வலிமை மிக்கவர்கள் தலைவர்கள் ஆயினர். கிராமங்களும், நகரங்களும் நிலை பெற்றபோதும் இவ்வாறு தலைவர்கள் நியமிக்கப்பட்டதை முன்னர் பார்த்தோம். உணவு பற்றாக்குறையின் போதும், விலங்கை வேட்டையாடும் போதும் சில சமயங்களில் இக் கூட்டங்களுக்கிடையே சண்டை நிகழும். அந்தச் சண்டையில் வெற்றி பெற்றவன் தோற்றவனின் கூட்டத்திற்கும் கிராமங்களுக்கும் தலைவனாவான். ஒரு சண்டையில் வெற்றிபெற்ற களிப்பு, குழுக்களே நெஞ்சு நிரம்பச் செய்து பாடல்கள் பாடக் காரணமாயிற்று. தலைவனின் போர்த்திறம் பற்றியும், அவனது குணநலம் பற்றியும் பாடல்கள் உருவாக்கப்பட்டன. அப்பாடல்கள் ஒய்வு கிடைத்த போதெல்லாம் பாடப்பட்டுப் பரப்பப் பட்டன. முதலில் பாடல்கள் வாய்மூலம் மட்டுமே இசைக்கப்பட்டன. பாடல்கள் எழுத்து வடிவம் பெறவில்லை.