பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

விஞ்ஞானத்தின் கதை

இன்றைக்கு இருக்கும் செல்வாக்கு பாடகர்களுக்கு அந்த நாளில் இல்லை. பெரும்பாலும் பாடகர்கள் நாடோடிகளே. தலைவனைப்பற்றிப் புகழ்ந்து பாடுவதும் அதற்குச் சன்மானம் பெற்றுக்கொண்டு அடுத்த தலைவனைப் பற்றிப் பாடச் செல்வதும் அந்த நாடோடிகளின் வழக்கமாக இருந்தது. பின்பு தனித்தனிக் குழுக்களுக்கு மகிழ்ச்சிதர நிரந்தரமாகப் பாடகர்கள் தேவைப்பட்டதால் பாடகர்களுக்கு நாடோடிவாழ்க்கை முடிந்து நிலையான வாழ்க்கை தொடங்கிற்று. இத்தகைய நிலையான வாழ்க்கைக்குக் காரணம் கோவில்களின் எழுச்சி என்றும் சொல்லலாம். ஊருக்குப் பொதுவாக அன்று கோவில்தான் கலை அரங்கமாக அமைந்திருந்தது.

நாளடைவில் இசைக்கருவிகள் பிறந்து இசையை வெகுவாகப் பரப்பின. மனிதனை ஈர்ப்பதில் இசைக்கு இணையாக வேறெதுவும் இல்லை எனலாம். மின்சாரம் அறிமுகமானபின் ரேடியோ, டெலிவிஷன் மூலமாக கலைகள் வெகு வேகமாகப் பரப்பப்படுகின்றன.

இனி எழுத்தின் பிறப்பையும் வளர்ச்சியையும் பற்றி ஆராய்வோம்.

மனித இனத்தையும் விலங்கினத்தையும் வேறுபடுத்திக் காட்டுவது மொழிவளம். ஒருவர்க்கு ஒருவர் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ள இந்த மொழியின் உதவி மிகவும் அவசியம். மொழி என்று சொல்லும்போது பேச்சு, எழுத்து என்று இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவை இரண்டில் எழுத்துத்தான் முதலில் மனித வாழ்க்கையில் இடம் பெற்றது. வியப்பாக இருக்கிறதல்லவா? இதுதான் உண்மை.