பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலை

57

நாள்தோறும் பல்வேறு மொழிகளில் கோடிக்கணக்கான அச்சுப்பிரதிகளை வெளியிட்டு வருகின்றன.

உள்ளெழுந்த ஆர்வ மிகுதியை சீரிய முறையில் வெளியிட உதவுவது நாடகம். அதைப் பற்றியும் சற்றே இங்கு ஆராய்வோம்.

குழுக்களின் வெற்றியையும் தலைவனின் பிரதாபங்களையும் பாடல்கள் மூலம் பரப்பியதைப்போலவே சிலர் உரைநடை மூலம் பரப்பினர். ஊரின் எல்லையில் குன்றுப் பகுதி ஏதேனும் இருக்கும். அங்கு பாறை ஒன்றில் நின்றுகொண்டு ஒருவன் கதை சொல்லிக்கொண்டிருப்பான். பாறைக்குக் கீழே பொதுமக்கள் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் அவனது உரைகேட்டு மகிழ்வர். இந்த நிலைக்கு அடுத்து பாறைக்குப் பின் துணி ஒன்று தொங்கவிடப்பட்டது. அந்தத் துணியில் போர்க்களப் படமோ அல்லது கதை படிக்கப்படும் சூழலுக்கு ஏற்ப வேறு படமோ வரையப்பட்டிருக்கும். பொதுமக்கள் உட்கார்ந்து கேட்பதற்கு கற்களை வெட்டி இருக்கைகள் அமைத்தல், மரப் பலகைகளை வெட்டி இருக்கைகள் அமைத்தல் முதலிய முன்னேற்றங்கள் அடுத்து இடம் பெற்றன.

முதலில் நாடகம் ஒருவனால் மட்டும் படிக்கப்பட்டது. பின்னர் இருவரது உரையாடலாக அது மாற்றம் கண்டது. அதன் பின் கவிஞர்களும், நாடகாசிரியர்களும் புதுப் புது உத்திகளைக் கையாண்டு கதைப் பாத்திரங்களைப் பெருக்கினார்கள். அப்போது நடிப்பு அவ்வளவாகக் கவனிக்கப்படவில்லை. பேசும் பேச்சு ஒன்றுதான் உணர்ச்சியின் தூதுவன். அச்சம், கோபம், மகிழ்ச்சி முதலிய உணர்ச்சிகளை முகத்தில் தேக்கி