பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்சாரம்

71

கருவிகள் சில செய்யப்பட்டு அவற்றைக் காண்பதற்கே மக்களிடமிருந்து பணம் வாங்கினர் சில வியாபாரிகள்.

மின்சாரம் எவ்வாறு உணரப்பட்டதென்ற இன்னொரு முறையையும் குறிப்பிடலாம். கி. பி. 1780-இல் லூகி கால்வனி என்பவர் தவளை ஒன்றை அறுத்து உலோக சாதனங்களால் ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஓர் அதிர்ச்சியை அவர் உணர்ந்தார். மேலும் மேலும் ஆராய்ந்து மின்சார அதிர்ச்சியை அவர் உறுதிப் படுத்தினார்.

வானத்தில் தோன்றும் மின்னலும் மின்சாரத்தின் பதிப்பே என்பதை பெஞ்சமின் பிராங்க்ளின் என்பவர் தம் காற்றாடியை ஆகாயத்தில் பறக்கவிட்டு ஆராய்ந்து கண்டுபிடித்தார். இதை ஆணித்தரமான சோதனைகளால் நிரூபித்தும் சர் சான் பிரிங்கிள் என்பவர் ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதத்துடன் எதிர்த்தார். உண்மை வெற்றி கண்டது. இதன் விளைவாக ப்ரிங்கிள் விஞ்ஞானப் பேரவை (Royal Society) யிலிருந்து விலகிக்கொண்டார்.

கி.பி. 1729-இல் ஆங்கில நாட்டைச் சேர்ந்த ச்டீபன் கிரே என்பவர் ஒரு புது முயற்சியில் இறங்கினார். மின்சாரத்தை ஓர் இடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் கொண்டு செல்லும் வழி கண்டார். அறைக்குள்ளே அரங்கேறிய மின்சக்தி அம்பலத்திற்கு வந்தது. அவருடைய வீட்டுத் தோட்டத்தில் இரண்டு இடங்களுக்கு இடையே மின்சாரம் பாயத்தகுந்த உலோகக் கம்பியை இணைத்து முதலிடத்திலிருந்து ஒலியைக் கிளப்பினார்; அது இரண்டாவது இடத்தில் கேட்டது. இதுவே தந்தியின் பிறப்பு.