பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விஞ்ஞானத்தின் கதை

->*<-

1. விஞ்ஞானம் என்றால் என்ன ?

ண்பரைத் தேடி அவரது வீடு சென்றேன். எனது வருகைக்கு மதிப்புத் தந்து அங்கொரு நாய் குரைத்துக் கொண்டு ஓடி வந்தது. நண்பர் நாய் வளர்க்கிறார், என்ற உண்மை எனக்குத் தெரியாது. தனது எசமானரின் நண்பர் என்று அந்த நாய்க்கு என்னைத் தெரியாது. முன்னே அறிமுகமாகாத இருவர் சந்தித்துக் கொண்டோம். எனக்குப் பயந்து நாய் குரைக்க, அதற்குப் பயந்து நான் நடுங்க ஒரே குழப்பமாகிவிட்டது.

சிறிது இடைவேளைக்குப் பின் வீட்டிற்குள்ளிருந்து நண்பர் வந்தார். "வணக்கம்" என்று அவர் என்னை நோக்கிக் கூறிய மறுகணம் நாய் குரைப்பதை நிறுத்தியது. என்னை மிரட்டுவதை நிறுத்திவிட்டு நண்பரை அது சுற்றிச் சுற்றி வந்தது; வேட்டியைப் பற்றி இழுத்தது; அவரது காலைக் கடித்தது. நண்பர் என்னைப் போல் நடுங்கவில்லை; அமைதியாக என்னோடு உரையாடுவதில் ஈடுபட்டார். எனக்குப் பெருத்த வியப்பு! தனக்காக ஒரு பிராணியை நண்பர் எவ்வாறு பழக்கி உள்ளார்!

அந்த நாளுக்குப் பின் நான் நண்பரை அடிக்கடி அவரது வீட்டில் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.