பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

விஞ்ஞானத்தின் கதை

அதன் விளைவாக நாய் என்னிடம் பழகுவதில் மாற்றம் உணர்ந்தேன். என்னைக் கண்டால் சீறிக் குரைப்பதில்லை; காலால் விந்தி என் கைகளைக் கடிக்க அது முயல்வதில்லை. எனக்கும் அதனிடம் அச்சம் அறவே ஒழிந்து அதன் பெருமை தெரிய வந்தது.

அந்த நாயினால் எனக்கு உலக உண்மை ஒன்று விளங்கியது. எந்த உயிரும் முதலில் தனக்கு அறிமுகமாகாதவற்றைக் காணும்போது அச்சமடைகிறது. அந்த அச்சம் குறையக் குறையத் தெளிவு பிறக்கிறது. உயிரினங்களில் முதன்மையானவன் மனிதன். அவன் எதையும் கண்டு எளிதில் அச்சம் அடைவதில்லை. புதுப்புது வாழ்வை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் மனிதன் அச்சத்தை நீக்கிய தெளிவும், அதனால் வளர்ச்சியும் பெறுகிறான். எங்கே தெளிவு மிளிர்கிறதோ அங்கே அச்சமில்லை அல்லவா? எனவேதான் இயற்கை என்னும் திரையில் வரையப்பட்டிருக்கும் ஓவிய இரகசியங்களை மனிதன் சுவைக்க முற்படுகிறான். இயற்கை நிலை மின்னலையும், ஆற்று வெள்ளத்தையும் கண்டு மருண்டோடிய மனித குலம் எங்கே? "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! இறைவா !! இறைவா!!!” என்று மகிழ்ச்சிக் கூத்தாடும் இன்றைய மனித குலம் எங்கே? அத்தனையும் கால ஓட்டத்தின் அரிய சாதனை. அச்சம் தொலைந்து இயற்கையின் தன்மையைப் புரிந்து கொண்ட உலகின் முழு இரசிகன் இன்றைய மனிதன்.

மனிதன் பிற பிராணிகளிலிருந்து தனிப்பட்ட அறிவு பெற்றவன். இதை நாம் எவ்வாறு துணிந்து கூற முடியும்?