பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விஞ்ஞானம் என்றால் என்ன?

3

தன் சூழ்நிலையை உணர்ந்து அச் சூழலுக்கு ஏற்ப தன்னை உருவாக்கிக் கொள்ளும் மனிதனைத்தான் நாம் அறிவு பெற்றவனாகக் கருதுகிறோம். இத்தகைய அறிவை முயற்சி, தோல்வி, வெற்றி ஆகியவை உள்ளடங்கிய சோதனைகள் மூலமே அவன் பெறமுடியும். அனுபவங்கள் மனித அறிவை வளர்க்கின்றன. உலகம் பரந்து கிடப்பதால் அனுபவங்கள் பெருகுகின்றன; அனுபவங்கள் பெருகுவதால் அறிவு விரிகிறது; வளர்கிறது. மனிதனின் ஆர்வத் துடிப்பிற்கு இலக்காயுள்ள உலகம் எல்லை இன்றி பரந்து கிடக்கும் காரணத்தால் அறிவியல் துறைக்கு முடிவே இல்லை.

இந்த அறிவியல் துறையைத்தான் நாம் விஞ்ஞானம் என்று அழைக்கிறோம். விஞ்ஞானம் என்ற சொல்லைக் கேட்டாலே மருண்டோடும் தன்மை நம்மில் பலருக்கு இருக்கிறது. அவ்வாறு அஞ்சத் தேவை இல்லை. ஐம்பொறிகளின் உதவியாலும் நாம் பெறும் அனுபவங்களைத் திரட்டுவதே விஞ்ஞானம் என்று சொன்னால் அதுவே விஞ்ஞானம் என்ற சொல்லுக்குத் தரும் தகுந்த விளக்கமாகும்.

நமது வாழ்க்கையில் அம்புலிப் பருவம் ஒரு பகுதி. வானத்துச் சந்திரன் நம் கையில் கிடைக்க வேண்டுமென்று கையை, காலை ஆட்டிய பழைய பருவத்தை என்றேனும் நாம் நினைத்துப் பார்த்தால் நமக்குச் சிரிப்பு வருவதில்லையா? அந்தச் சிரிப்பு அனுபவ முத்திரை பெற்ற சிரிப்பு. அந்த அனுபவ அறிவு இன்று நம்மை முழு மனிதனாக மாற்றியிருக்கிறது.

உலகின் ஆதி மனிதன் இன்றைய மனிதனிலிருந்து மிகவும் வேறுபட்டவன். அந்தக் காலத்து