பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

விஞ்ஞானத்தின் கதை

மனிதனுக்கு நிலையானதொரு வாழ்வு கிடையாது. எதைக் கண்டாலும் அச்சம் இணைந்த பரபரப்பு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் திறமில்லாத் தன்மை என்பன அவனிடம் விளங்கின. காட்டில் பிற விலங்குகளோடு தானும் ஒரு விலங்காக அவன் வாழ்ந்து வந்தான். மனிதனின் முதல் தேவை உணவு. அதை அவன் விலங்குகளை வேட்டையாடிப் பெற்றான். வேட்டைக்கு உதவியாகக் கல்லால் ஆன கருவிகளை அவன் உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டான். அனுபவம் பின்னர் அவனை வேறு பாதையில் திருப்பியது. வேட்டையாடி உயிர் வளர்க்கும் தன்மையினின்றும் மாறுபட்டு நிலத்தில் பயிர் செய்து உழவனாக உயிர் வளர்க்கும் புதுமை பெற்றான். ஆக அனுபவங்களும், அவற்றால் ஏற்பட்ட அறிவும் மனித குல வளர்ச்சிப் பாதையை அவ்வப் போது செப்பனிட்டு வந்தன.

அன்றைய மனிதனுக்கும் அனுபவங்கள் எதிர்ப்பட்டன. ஆனால் அவற்றைத் திரட்டி, ஒழுங்குபடுத்தி, பயன்படுத்தி தன் வாழ்வைப் பெருக்கிக் கொள்ள முதலில் அவன் அறிந்தான் அல்லன். அவனுடைய அப்போதைய உணர்ச்சி வேலை செய்யவேண்டும் என்ற ஒரே உணர்ச்சிதான். மனிதன் உழவனாக மாறிய காலத்தில், பயிர் சிற்சில இடங்களில் நன்கு செழிப்புடன் வளர்ந்ததையும், வேறு சில இடங்களில் அவ்வாறு வளராததையும் கண்டான். அத்துடன் அத்தகைய வளர்ச்சி நிலையற்றதாக இருந்ததையும் உணர்ந்தான். ஆனால் அதற்கான காரணம் இன்னதென்று அவன் தெளிந்தானல்லன்.