பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விஞ்ஞானத்தின் கதை

5

தனக்கு ஏற்படும் அனுபவங்களுக்கான காரண காரியங்களை ஒழுங்குபடத் திரட்டிக் கொள்பவனைத் தான் நாம் அறிஞன் என்று பாராட்டுகிறோம். எதற்கும் காரணம் கேட்கும் தன்மை அறிவுக் கோயிலின் உள்ளே செல்ல உதவும் முதல் படிக்கல். உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆங்காங்கே ஓரிருவர் தமக்கு நேரும் அனுபவங்களுக்குக் காரணம் தேட முனைந்தனர். எகிப்து, ஈராக், இந்தியா, சைனா முதலிய இடங்களில் முதலில் இத்தகைய அறிஞர் பெருமக்கள் தோன்றினர். அங்குதான் நாகரிகமும் முதலில் தோன்றி நிலைத்தது. அத்தகைய அறிஞரின் காலம் சரித்திர காலத்திற்கும் முற்பட்டிருந்தமையால் அவர்களுடைய பெயர்களும், அவர்கள் எழுதி வைத்த குறிப்பேடுகளும் கால வெள்ளத்தில் அழிந்து பட்டன.

————