பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. சிந்தனையாளர் சிலர்

ண்பர் வீட்டு நாய் இப்போது என்னோடு நட்புறவு கொண்டிருப்பதைக் குறிப்பிட்டேனல்லவா? இந்த விளைவு ஏற்பட்டதன் காரணம் மனப் போக்கில் எழுந்த மாற்றந்தான். மனத்தின் தன்மை எப்போதும் எதையேனும் சிந்தித்துக் கொண்டிருப்பது ஆகும். நாயிடம் பழகவேண்டிய முறைகளை நான் படிப்படியாக உணர்ந்து கற்றுக்கொண்டேன். அதைப் போலவே நாயும் நிலை உணர்ந்து என்னோடு பழகுகிறது. இத்தகைய மனச் சீரமைப்பில்தான் உலகம் நிலைக்கிறது.

மனத்தை அடித்தளமாகக் கொண்டு எழுப்பப் படும் விஞ்ஞான மாளிகையின் இரண்டு நுழை வாயில்கள் "ஏன்”, "எப்படி?" என்ற கேள்விகளாகும். இந்த இரண்டு கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில்தான் உலகம் முன்னேறியதை நாம் அறியலாம். உள் மனத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது புத்தரின் நினைவு வருகிறது. அவர் தனக்குள் கேட்டுக் கொண்ட கேள்விகள்——"ஏன் உலகில் துன்பம் ஏற்படுகிறது? எப்படி அதற்கு முடிவு காணலாம்?" என்பனவாகும். இந்தக் கேள்விகளுக்குத் தெளிவு பிறந்த பின்புதான் சித்தார்த்தனாக இருந்த அந்தச் சாதாரண மனிதர் புத்தர் என்ற ஞானியாக மாறினார். ஆம், மனத்தைப் பற்றியும், மனம் இயங்கும் தன்மையைப் பற்றியும் ஆராய்ந்து முடிவு கண்ட விஞ்ஞானி ஆனார். இத்தகைய ஆராய்ச்சியைத்தான் இப்பொழுது நாம் உள இயல் (Psychology) என்று குறிப்பிடுகிறோம்.