பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

131


வெசேலியஸ் காலம்வரை மக்கள் நம்பிக் கொண்டிருந்த மனித உடற்கூறு இயல்களைப் பற்றிய குருட்டுக் கொள்கைகளை, அவர் கடுமையாகச் சாட்டியதை கண்டித்துத்தான் அவருக்கு எதிர்ப்புச் சக்திகள் பேயாட்டம் ஆட ஆரம்பித்தன.

மதவெறியில் மூழ்கிப் போயிருந்த அக்கால மருத்துவர்கள் எண்ணற்றோர் வேண்டுமென்றே வெசேலியசை எதிர்த்து தாக்குதல்கள் நடத்தினார்கள்.

மதவெறிப்பிடித்த மருத்துவக் காப்பாளர்களிடம் சென்று மனித உடலை அறுத்து பரிசோதனை செய்வதை அவருடைய நண்பனே சென்று விவரமாகக் கூறி அதையும் காசாக்கிக் கொண்டான்.

காசாக்கிக் கொண்டவன் யார் தெரியுமா?

ஒருநாள் சிறைச்சாலை ஓரமாகக் கிடந்த எலும்புக் கூட்டை வெசேலியசிடம் கொண்டுவந்து கொடுத்தானே அவன்தான். மறுநாள் எல்லா மதவெறி மருத்துவர்களும் ஒன்றுகூடினார்கள். வெசேலியசை ஒழித்துக் கட்ட இதுதான் காலம் என்று கணக்கிட்டார்கள்.

ஒடினார்கள் மத குருமார்களிடம்.

வெசேலியஸ் இரவோடு இரவாக சில பிணங்களை அறுத்ததையும், அவற்றை இரவோடு இரவாக புதைத்த இடங்களையும் விவரமாகக் கூறினார்கள் மதகுருமார்களிடம்!

இந்த பயங்கரச் செயல் மத விரோதம் மட்டுமல்ல மதத் துரோகம் என்ற குற்றச் சாட்டை சாட்டி அவருக்குத் தண்டனைப் பெற்றுத்தர முயன்றார்கள்.