பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

377. ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி,
        ஒருவர் கண் பட்டு உடைந்ததாம் மண்டபம்.

378. கழுத்துண்டு; கையில்லை.
        நாக்குண்டு; பேச்சில்லை.
        வாயுண்டு, அசைவில்லை.
        தொப்பியுண்டு; தலைமயிர் இல்லை.

379. நான் சிரித்தால் நீ சிரிப்பாய்;
        நான் அழுதால் நீ அழுவாய்,
        நான் முறைத்தால் நீ முறைப்பாய்.

380. மாலுமிக்கு வழிக்கருவி;
        மாதருக்குத் தொழில் கருவி.

381. காட்டுக்குள்ளே நெல் விதைத்தேன்;
        காக்கா
யும் தின்னவில்லை;
        குருவியும் தின்னவில்லை.

382. உயிர் இல்லாப்பறவை,
        ஊர் விட்டு ஊர் செல்லும்.

383. இத்தனுாண்டு பிள்ளைக்குக்
        குத்தினாப் போல் நாமம்.

384. வாயைத் திறந்தால் முத்து உதிரும்.

385. காய்த்தும் பழுக்காத மரம் என்ன மரம்?

386. வெள்ளைக் கத்திரிக்காய்,
        கள்ளக் கூச்சல் போடுது.

387. வெள்ளை நிறத்துக் கள்ளச் சாமியார்,
        கரையில் நின்று கடுந்தவம் செய்கிறார்.

388. தான் இருந்தால் பிறரை இருக்கவிடமாட்டான் அவன் யார்?

389. ஒரு ஊருக்கு ஐந்து வழி.

390. அண்ணன் தம்பி இருவர்.
        தம்பி ஒரு சுற்றுச் சுற்றினால்
        அண்ணன் பன்னிரண்டு சுற்றுச் சுற்றுவான்.