பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

எஸ். எம். கமால்

வடிக்கையின் எதிரொலி எப்படி இருக்கிறது என்பதை நோட்டமிட்டு வருகிறேன். படைப்பிரிவுகளை இங்கிருந்து அனுப்பிவிட்டால் வன்செயல்கள் நிகழும்பொழுது அவைகளை கட்டுப்படுத்த இயலாமல் போய்விடும். மற்றும் மன்னரைப் பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தும், அவரை இங்கிருந்து அகற்றுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. நமது கட்டுப்பாட்டிற்குள் இருந்த அவரது போக்கு சூழ்நிலைக்கு ஒவ்வாதவாறு இருந்தது. அவரது சொத்துக்கள் அனைத்தும் அவரது ஊழியர்கள் பொறுப்பிலும் அரண்மனையில் நிறுத்தப்பட்டுள்ள தளபதி மார்ட்டின்ஸின் வீரர்களின் பாதுகாப்பிலும் உள்ளன' என்று தெரிவித்திருந்தார்.[1]

மறவர் சீமை இதிகாசத்தின் இணையற்ற இறுதிப்பகுதி தொடங்கி விட்டது. பாண்டியர், சோழ பாண்டியர், மதுரை சுல்தான்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோரது ஆயிர வருட ஆட்சிக் காலத்தில், அந்தந்த ஆட்சியாளருக்கு உறுதுணையாக இருந்து தங்களது மானத்தையும், வீரத்தையும் நிலை நிறுத்திய மறவர்கள் நிலைகுலைந்து விட்டனரா? அவர்களது புகழ் பரப்பும் பரணியும், போர் மணக்கும் வஞ்சியும் காஞ்சியும், பொன்றி விட்டனவா? மதுரையை மைசூர் படையெடுப்பில் இருந்து மீட்டு திருமலை நாயக்கரது ஆட்சியைக் காத்தவர்கள்-சொக்கப்ப நாயக்கரை திருச்சியிலிருந்து சிறை மீட்டவர்கள்-தென் பாண்டிச் சீமை முழுவதிலுமுள்ள அனைத்துப் பாளையக்காரர்களது தலைவராக திகழ்ந்து வீரக் கழல் சூடி இருந்தவர்கள் அவர்களது வீறுகொண்ட தோள்களில் விளையாடிய வீரம் எங்கே? கண்ணை மறைக்கும் விண்ணை சாடிட வெகுண்டெழுந்த இமயமும் வீழ்ச்சி பெற்ற வரலாறும் உண்டா? இல்லையே!! தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வ, தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற இயற்கை மர்மம் எப்பொழுது வெளியாகும்? இந்த வினாக்களுக்கு விடையளிக்க காலந்தான் கனிந்து வர வேண்டும்!

மறவர் சீமை முழுவதும் கும்பெனியாரின் கைக்குள் வந்து விட்டது. சேதுபதி மன்னரது சொத்துக்கள் அனைத்தையும்


  1. Ibid., 9–2–1795, pp. 323–27