பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
176
 

1740-ல் சிவகுமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி மன்னர் காலத்தில் துவக்கப்பெற்று கி.பி. 1769-ல் முத்து ராமலிங்க விஜயரகுநாத சேதுபதி மன்னர் ஆட்சியில் நிறைவு பெற்றது. இந்த நிறைவு விழாவினையொட்டி திருக்கோயிலின் மேலக் கோபுர வாசலில் இந்த மன்னரது திருவுருவச்சிலை நிறுவப் பட்டது. (பார்க்க மேலட்டை சித்திரம்)

கோயிலின் திருமதிலுக்கு 30 முதல் 40 அடி உட்புறமாக கிழமேல் திக்கில் 880 அடியும் தெற்கு வடக்கில் 672 அடியுமாக 17 அடி அகலத்தில் இந்தப் பிரகாரம் முழுவதும் கல்லால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரகாரத்தின் இருபுறமும், 5 அடி உயர நீண்ட மேடையில், 12 அடி உயரமுள்ள 1212 கல்துண்கள், இருபுறமும் வரிசையாக நிற்கின்றன. ஒரே கல்லாலான ஒவ்வொரு துாணும் சிற்பக் கலையழகுடன், ஒரே அளவிலும், பரிணாமத்திலும் வடித்தெடுக்கப்பட்டுள்ளது. உலகத்தில் வேறு எங்கும் காணப்படாத இவ்வளவு நீண்ட கல் கட்டுமானம் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலை முடிவைப் பார்ப்பவர்களது கண்களுக்கு சிறந்த கலை விருந்தாக காட்சி அளிக்கிறது. கட்டுமானக் கலையின் சிறந்த உத்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரகாரத்தின் பிரம்மாண்டமான தோற்றமும் அதனை ஊடுருவித் தெளிவாகப் புலப்படுத்தும் நல்ல வெளிச்ச வசதியும், இந்த அமைப்பைக் காண்பவர்களது உள்ளத்தில் வியப்பையும் ஒருவித பிரமையையும் தோற்றுவித்துக் கொண்டு இருக்கிறது.

இந்தக் கட்டுமான அழகில் மிகவும் ஈடுபட்ட வெளிநாட்டறிஞர்களான பர்ஜஸ், பெர்குஸன் ஆகியோர் தங்களது நூல்களில் இந்த அமைப்பை மிகவும் பாராட்டி வரைந்துள்ளார்கள். இந்தச் சிறந்த அமைப்பை நிர்மாணித்த சிற்பாசிரியன் பெயரை வரலாறு மறைத்து விட்டது வருந்தத்தக்கது. இன்னும் ஒரு புதிர் என்னவென்றால் இராமேஸ்வரம் தீவு நான்கு புறமும் கடலால் சூழப்பட்டு இருக்கும்பொழுது, இந்தக் கட்டுமானத்திற்குத் தேவையான இவ்வளவு பாறாங்கற்கள் எந்த மலையிலிருந்து, எவ்விதம் இந்தக் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன என்பதாகும்.