பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

45

தாரை வார்த்துக் கொடுத்தார்.[1] எதிர்பாராத இந்த அரசியல் திருப்பத்திற்கு காரணங்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. கர்நாடக நவாப்பின் ஆட்சி பீடத்திற்கு சந்தா சாகிபுவுடன் போட்டியிட்ட முகம்மது அலியை, ஆங்கிலேயர் தங்களது ஆயுத உதவியாலும், இராஜ தந்திரத்தாலும் வெற்றிபெறச் செய்தனர். ஆனால் தொடர்ந்து எழுந்த அரசியல் குழப்பங்கள்-நெல்லைச் சீமை பாளையக்காரர்களது கிளர்ச்சி, கமமந்தான் கான்சாகிப்பின் மதுரைப் புரட்சி, மதுரைச் சீமை ஆளுநரான நவாப்பின் தமையன் மாபூஸ்கானின் துரோகம், மறவர் சீமை, தஞ்சைத் தரணி படையெடுப்புக்கள், மைசூர் மன்னர் ஹைதரலியுடன் கர்நாடகப் போர், பிரஞ்சுக்காரர்களது சென்னை முற்றுகை-ஆகிய அரசியல் மோதல்களினால் நவாப் முகமதலி முழுமையாக கிழக்கிந்தியக் கப்பெனியாரது படைபலத்தைப் பெற்று சமாளிக்க வேண்டியதிருந்தது. இதன் காரணமாக நவாப் போர் நடவடிக்கைகளுக்கான பெருஞ்செலவை கும்பெனியாருக்கு கடனாக செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் எழுந்தது. அத்துடன் ஆற்காட்டிலிருந்து சென்னை சேப்பாக்கத்தில் குடியேறுவதற்கு பிரம்மாண்டமான மாளிகையினை, (1783-1771) பல ஆயிரக்கணக்கான ரூபாய் கடன் தொகையை ஆங்கிலேயரிடம் மிகக் கூடுதலான வட்டிக்கு (20 முதல் 30 சதவீதம்) பெற்று-அமைத்து கும்மாளம் போட்ட ஆடம்பரச் செலவுகளும்[2] சேர்ந்து நவாப் முகமதலியின் கழுத்தை நெறித்தன.

இவைகளை சமாளிப்பதற்காக, அவர் பல சலுகைகளை ஆங்கிலேயர்களுக்கு வழங்கி வந்தார். முதலில் கி. பி. 1763-ல், இன்றைய செங்கை மாவட்டத்தை கும்பெனியாருக்கு நல்லெண்ண நடவடிக்கையாக விட்டுக் கொடுத்தார். நவாப்பின் கைப்பற்றுதலில் உள்ள நெல்லைச் சீமையின் வரி வசூலை மேற்கொள்ளும் உரிமையை அடுத்து, கும்பெனியார் பெற்றனர்.[3]


  1. Karnatic Treaty, 1792, 15-7-1792
  2. The Hindu (Madras) The Former Residence of Arcot' (3-0-1963)
  3. Rajayyan. Dr. K., Administration and Society in Carnatic (1966)