பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

47

ஒன்பது லட்சம் ஸ்டார் பக்கோடா பணத்தை பங்குத் தொகையாகக் கொடுக்க வேண்டும். மேலும் பழைய கடன் பாக்கிக்காக 6, 21, 105 ஸ்டார் பக்கோடா பணமும் செலுத்த வேண்டும்.

ஐந்தாவது நிபந்தனைப்படி கும்பெனியார், நவாப்பிற்கு கட்டுப்பட்ட பாளையக்காரர் அனைவரிடமிருந்து ஆண்டு செலுத்த வேண்டிய பேஷ்குஷ் தொகை 2,64,704 ஸ்டார் பக்கோடா பணத்தையும் வசூலித்து முன் கடனுக்காக வரவுவைத்துக் கொள்ள வேண்டியது.

ஆறாவது நிபந்தனைப்படி, கும்பெனியார், நவாப்பின் பெயரால் பாளையக்காரர்களிடத்து அதிகாரங்களை செலுத்திக் கொள்வது.

ஏழாவது நிபந்தனைப்படி, நவாப் ஆண்டுதோறும் பாளையக்காரர் பேஷ்குஷ் தொகையைக் கழித்துக்கொண்டு பத்து தவணைகளில் 12, 56, 400 ஸ்டார் பக்கோடா பணம் செலுத்த வேண்டும்.

இந்த தொகையை குறிப்பிட்ட தவணை நாளுக்கு பதினைந்து நாட்கள் முன்னதாகச் செலுத்த நவாப் தவறினால், நவாப்பிற்குச் சொந்தமான திருநெல்வேலி, மதுரை, திருச்சி, நெல்லூர், வடஆற்காடு, பழநாடு, ஓங்கோல் சீமைகள் அனைத்தையும் அல்லது அவைகளில் ஒரு சீமை வரி வசூலை கும்பெனியார் மேற்கொள்ள வேண்டியது. பாக்கி முழுவதையும் வசூலித்த பிறகு அந்தச் சீமையை மீண்டும் நவாப்பிற்கு கொடுத்துவிட வேண்டியது. இரண்டாவது தவணையிலும் நவாப் பணம் செலுத்துவதில் தாமதம் செய்தால், மேலே சொன்னவாறு மேற்கொள்ளப்பட்ட சீமையை கும்பெனியாரே நிரந்தரமாக வைத்துக்கொள்ள வேண்டியது என்பது உடன்பாட்டில் எட்டாவது நிபந்தனை.

மேலும், நவாப்பிற்குப் பதிலாக, பாளையக்காரர்களிடமிருந்து தேசகாவல் பணிக்கான, பாரம்பரியமான ஆண்டுக் காணிக்கைகளை அவர்களே பெற்றுக் கொள்ளும் உரிமையையும் பெற்றனர். இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து மறவர் சீமையை மூன்று ஆண்டு கால நிர்வாகத்திற்கு ஒப்படைப்பில் பெற்றனர்.