பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

எஸ். எம். கமால்


இத்தகைய, விபரீதமான முடிவிற்கு வர ஆற்காட்டு நவாப்பினை உந்திய காரணங்கள் எவை என்பதை விளக்க உதவும் ஆவணம் எதுவும் இல்லை (ஒரு வேளை இதுவரை மொழியாக்கம் செய்யப்படாமல் பாரசீக மொழியிலுள்ள நவாப்பினது கடிதத் தொகுப்புக்கள் மொழியாக்கம் பெற்றால் விளக்கம் பெற உதவலாம்).

முதுமையிலும் கடன் சுமையிலும் முதிர்ந்துவிட்ட முகமதலி நவாப் கொண்ட அவசர முடிவா? அல்லது மறவர் சீமையின் நிச்சயமற்ற சூழ்நிலையா?

அப்பொழுது இலங்கையில் காலூன்றி விட்ட ஆங்கிலேயருக்கு, எதிர்க்கரையான மறவர் சீமை எதிர்காலத்தில் தங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற கருத்தில் அவர்கள் நவாப்பை வற்புறுத்திப் பெற்ற தானமா?

இந்த வினாக்களுக்கு விடை காண இயலாதவையாக உள்ளன. என்றாலும், 9-7-1791ம் தேதியிட்ட கும்பெனியாரது ஆவணத்தின்படி தஞ்சை தரணியையும், எஞ்சியுள்ள தமிழ்நாட்டில் நவாப்பிற்கு ஆதிக்கம் உள்ள அனைத்துப் பகுதிகளையும், தங்களது நிர்வாக கட்டமைப்பில் கொண்டுவர அவர்கள் துடித்துக் கொண்டிருந்தனர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.[1] நவாப்பின் முடிவிற்கான காரணம் எதுவாக இருந்தாலும், ஆங்கில ஆதிக்கம் தமிழ்நாட்டில் நிலைகொள்ளுவதற்கு முதன் முதலில் வளமையற்ற மறவர் சீமையின், மண்ணைத் தேர்வு செய்தவர்கள் மதியூகிகள் என்பதை வரலாறு விளம்புகிறது. தமிழக வரலாற்றினை ஈர்த்து இழுத்துச் செல்லும் இத்தகைய எதிர்பாராத உத்திகள் சேதுபதி மன்னரது சாதனைகளுக்கு பெரும் சோதனைகளை உருவாக்கின. அத்துடன் இராமநாதபுரத்திற்கும், சிவகங்கைக்கும் இடையில் எழுந்த பிணக்குகளும், மோதல்களும் இராமநாதபுரம் அரசியலை பதினெட்டாம் நூற்றாண்டின் வரலாற்று விளிம்புகளுக்கு விரைவாக நெருடி நெருக்கின.


  1. Mily. Cons, Vol. 136, 9-7-1791, p. 2066