பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

எஸ். எம். கமால்

இருப்பதுடன், சிவகங்கைச் சீமையைக் கொள்ளையிட்டுப் பாழாக்கிய மேல்நாட்டுக் கள்ளர்களையும், திருநெல்வேலிச்சீமை பாளையக்காரர்களையும், தமது அணியில் சேதுபதி மன்னர் ஆயத்தமாக வைத்துள்ளார் என்றும் அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படுமானால் அவர்கள் ஆயுதம் தாங்கியவர்களாக சேதுபதி மன்னரது உதவிக்கு ஓடோடி வருவார்கள் என்றும் அதன் விளைவை தம்மால் விவரித்துச் சொல்ல இயலாத நிலையில் இருப்பதாக கலெக்டர் இன்னொரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.[1]


அதனை ஆராய்ந்த சென்னைக் கவர்னர், மன்னரை நேரில் விசாரித்து அவரது சுயேச்சையான போக்கிற்கு முகாந்திரத்தை பெற்று அனுப்புமாறு கலெக்டருக்கு உத்தரவு அனுப்பினார். தொண்டியில் உள்ள கச்சேரியில் தம்மை வந்து சந்திக்குமாறு சேதுபதி மன்னருக்கு கலெக்டர் பவுனி 'சம்மன்' அனுப்பி வைத்தார்.[2] பேஷ்குஷ் கலெக்டரது தலைமையிடமாக அப்பொழுது தொண்டி இருந்து வந்தது. மணப்பாறையிலிருந்து திருநெல்வேலி வரையிலான பகுதி பாளையக்காரர்களது வரவு செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து அவர்கள் செலுத்த வேண்டிய பேஷ்குவி தொகையை நிர்ணயம் செய்யும் ஜமா பந்தியை அங்கு கலெக்டர் நடத்தி வந்தார். சிவகங்கைச் சீமையின் பகுதியான தொண்டிக்கு வருவதில் சேதுபதி மன்னருக்கு ஆட்சேபணை இருந்தால், அந்த ஊருக்கு அண்மையிலுள்ள இராமநாதபுரம் சீமையான முத்துராமலிங்கபுரம் சத்திரத்தில் தங்களது சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என்ற மாற்று யோசனையும் கலெக்டரது உத்திரவில் கண்டிருந்தது.[3] ஆனால் பின்னர் சென்னைக் கோட்டைக்கு அனுப்பிய மடலில் தமது இந்த உத்தரவை இராமநாதபுரம் மன்னர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தை கலெக்டர் வெளியிட்டிருந்தார்.[4] இராமநாதபுரம் மன்னரது இத்தகைய


  1. Military consultations, Vol. 189 B, 29-8-1794 p. 39.10
  2. Military consultations, Vol. 189 A, 26-9-1794, p. 39.10
  3. Ibid., 7-9-1794, pp. 3923, 24
  4. Ibid., 13–9–1794, pp. 3920-28