உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

விடுதலைப் போர்


முன்னாளுக்கும் இன்னாளுக்கும் இடையே, திராவிடநாடு தேய்ந்தது. தீயர் கூட்டுறவால் திருஇடம் தீய்ந்தது. ஆரியரை அணைத்தது, உள்ளம்மெலிந்தது. கற்பனை உருவங்களைக் கைகூப்பித் தொழவும், நடமாடும் நயவஞ்சகத்தை நாதன் எனப் போற்றவும், உழைப்பவனை உதாசீனம் செய்து உரத்த குரலோனை ஆதரிக்கவும் தொடங்கிற்று. ஒரு இனத்தின் அழிவுக்குக் காரணமாக உள்ள அனைத்தையும், திராவிடம் கண்டது, கொண்டது; எனவே முன்னாள் பெருமையும் மாண்டது.

இந்நாள், 'திராவிடநாடு' என்பதே புதியதோர் பெயர் போலத் தோன்றும் நிலைமை. திராவிடம், இந்தியாவிலே ஒரு பகுதி. வீழ்ந்த ஜெர்மனியில், பிரிட்டிஷ் ஆட்சி ஒரு மாவட்டத்திலும் சோவிய ஆட்சி வேறோர் மாவட்டத்திலும், வேறு ஆட்சி வேறு புறத்திலும் என்று இருக்கக் காண்கிறோம். ஒரு ஆர்ப்பாட்டக்காரனை நம்பி அழிவுப்பாதையிலே சென்றதால் அந்நாட்டுக்கு இந்நிலை. நிலையோ, ஆங்கில ஆட்சி, வாழ்க்கையின் ஒரு பகுதியில்; ஆரிய ஆட்சி வாழ்க்கையின் எல்லாப்பகுதிகளிலும்; வடநாட்டவர் ஆட்சி பொருளாதாரப் பகுதியிலே; நமக்கு எங்கும் தன்னாட்சி இல்லை ! எங்கும் நல்லாட்சி இல்லை ! தன்னாட்சியைவிட நல்லாட்சி இருக்கமுடியாதல்லவா? இவ்வளவுக்கும், நாம் யாரிடமும் தோற்கவில்லை. அவள் அதரம் நச்சு நீர் ஊற்று என்று அறியாது, இன்பவல்லியின் இதழைச் சுவைத்துக்கொண்டே கீழே சாய்ந்தவன் போலாயிற்று திராவிட நாட்டின் கதி. திராவிடநாடு,