உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமுகம்

45


ஆரியத்தின் வேட்டைக்காடு ! ஆங்கிலருக்கு அடிமைகள் வாழும் கூடு ! வடநாட்டவருக்கு, வகையில்லார் வாழும் சந்தை ! இந்நாள் நிலையில், திராவிடர், எடுப்பார் கைப்பிள்ளையாகி, நாடு, இனம், மொழி, யாவும் மறந்து, சிறுவாழ்விலே உள்ளனர். களைநிரம்பிய கழனி, சேறு நிரம்பிய குளம், கரைபடிந்த துகில், என்றாகிவிட்டது. அறிவுப்பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது இங்கு. ஆண்மையாளர்கள், அஃதிலாருக்கு அடிமையாயினர். திராவிடம் இன்று கேவலம் ஓர் கேலிச் சித்திரமாகிவிட்டது.

ஒரு இனம், அழிக்கப்படுவது கொடுமை; அதனினும் கொடுமை, அந்த இனத்தவரையே அதனை அறிந்துகொள்ள முடியாதபடி அறியாமையில் ஆழ்த்திவைத்திருப்பது. வாழ்ந்த வணிகனிடம் கையாளாக இருந்தவன், வஞ்சகத்தால் உயர்ந்து, உயர்ந்த நிலையிலே, வீழ்ந்த வணிகனைத், தனக்குக் குற்றேவல் புரிபவனாக்கிக் கொள்ளல் கொடுமை. காணச் சகிக்காத கொடுமை ! அதனினும் கொடுமையை நாம் காண்கிறோம், நமது கண்களிலே இரத்தம் கசியவில்லை. ஆசியச் சமவெளியிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு, பச்சையான இடம் நாடி வந்தவர் ஆரியர் என்று படிக்கிறோம். அந்த நேரத்தில் திராவிடம் உலக வல்லரசுகளில் ஒன்றாகத் திகழந்ததென்றும் படிக்கிறோம். அந்த ஆரியனது வழி வந்தவனின் அடிபணியும் திராவிடனை இன்று காண்கிறோம் ! இதனினும் கொடுமை வேறு என்ன காணவேண்டும் ! குயிலுக்குக் கோட்டான் இசை கற்றுக் கொடுக்கிறது, மயிலுக்கு மந்தி நடனம் கற்றுக்-