பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழகப் பொதுப்பணி அமைச்சர்

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி

அரசியல் உலகில் அறிஞர் அண்ணா அவர்களின் அருமைத் தம்பியர்களுள் ஒருவரெனக் கருதப்படும் கலைஞர் மு. கருணாநிதியவர்கள் 1924 இல், திருவாரூரிற் பிறந்தார். மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியில் பள்ளி யிறுதிவரை பயின்றார். இளமையிலேயே மொழிப்பற்று - நாட்டுப்பற்று - இனப்பற்று மிக்குடையோராய்த் திகழ்ந்தார். பெரியார் அவர்களையும், அறிஞர் அண்ணா அவர்களையும் தமக்கு வழிகாட்டியாகக் கொண்டு முறையே சமுதாய சீர்திருத்தம் அரசியல் ஆகிய துறைகளில் அயராது பாடுபட்டார். இந்தி எதிர்ப்பு, கல்லக்குடிப் போராட்டம், விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டுப் பலமுறை சிறை ஒறுப்புக்களுக்கு ஆட்பட்டு இவர் பட்ட இன்னல்கள் அளப்பில.

பேச்சாற்றல், எழுத்தாற்றல், கவிதைபுனையும் ஆற்றல், நடிப்பாற்றல் ஆகியன ஒருங்கே கைவரப் பெற்ற இவரைத் தமிழகம் கலைஞர் என அழைத்தது மிகை அன்று. இவர் எழுதிய நாடகங்களும், திரைப்பட வசனங்களும் கலையுலகில் பெரும் புரட்சியை உண்டு பண்ணின.

தி. மு. கழகம் தேர்தலில் ஈடுபட்ட நாள் முதல், அஃதாவது 1957 முதல் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து வாகை சூடிய இவர், இன்றைய தமிழக அமைச்சவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொருந்தும் பணி ஆற்றி வருகிறார். அத்துடன், தி. மு. கழகப் பொருளாளராகவும், கழகக் காவலர்களுள் தலையாயவராகவும் இருந்து இவர் ஆற்றிவரும் அரும்பணிகள் பல. ‘முரசொலி’ மூலம் இவர்தம் பணிச் சிறப்புக்களை நன்கறியலாம்.

விடுதலை வீரர்கள் பற்றிய கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கி இவர் தரும் கவிதை நலம் கண்டு களிப்போமாக.