பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருச்சிற்றம்பலக் கவிராயர்

இவர் தம் இயற்பெயர் இரகுநாதன் என்பது. இவர் 20-10-1923 இல் திருநெல்வேலியில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்து இந்துக் கல்லூரியில் பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அரசியலில் பற்றுக் கொண்டார். அதனால் கல்லூரிப் படிப்பை இழக்க நேர்ந்தது. தமிழ் இலக்கியங்களை விரும்பிப் படித்தார். எழுத்தாற்றல் பேச்சாற்றல்கள் கைவரப் பெற்ற இவர், சில காலம் 'தின மணி' இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அக்காலத்திற்றான் இவர்தம் எழுத்தாற்றல் வெளிப்படலாயிற்று. கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் பல இவரால் இயற்றப்பட்டு மக்கள் மன்றத்தில் சிறப்புப் பெறலாயின. திரு, இரகுநாதன் அவர்கள் 1945 இல் திருச்சிற்றம்பலக் கவிராயர் என்னும் புனை பெயரில் பல கவிதைகளை எழுதலானார். இவர் தம் கவிதைகள் நாட்டுப்பற்று, மொழிப் பற்று மிக்கு மிளிர்ந்தன. 'ரகுநாதன் கவிதைகள்' 'கவியரங்கக் கவிதைகள்' ஆகிய நூல்கள் இதற்குச் சான்று பகர்வனவாகும்.

மேலும் திரு. இரகுநாதன் அவர்கள் நாவல்கள், சிறுகதைகள், மொழி பெயர்ப்புக்கள் ஆக்குவதில் அருந்திறல் பெற்றவர். இவர் தமிழில் எழுதிய நாவல்கள் சிறுகதைகள் சில ரஷிய, செக், போலிஷ், ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1946 முதல் 1956 வரை 'முல்லை,' 'சக்தி' 'சாந்தி' ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவிருந்து தமிழ்ப்பணி ஆற்றி வருகிறார். 1967இல் 'சோவியத் நாடு' அனைத்திந்திய நேரு நினைவுப் பரிசை முதன் முறையாகப் பெற்ற தமிழர் இவர். ஈண்டுக் கட்ட பொம்மன் வரலாற்றைக் கவினுறத் தருகின்றார்.