பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ. உ. சிதம்பரனார்

57

அரைநொடியும் கடத்தலன்றி, இரு வரையும்
அங்கேயே கைது செய்தான்;சிங்க மானோர்
சிறைக்குள்ளே போய்நுழைந்தார்; நாட்டில் உள்ளோர்
சினநெருப்பில் தீய்ந்திட்டார்; பாய்ந் திட்டார்கள்!


கடையடைப்பு, கல்வியகக் கதவ டைப்பு!
காணுகின்ற பக்கமெலாம் மனக்கொ திப்பு!
படைபடையாய் அணிவகுப்பு உணர்வு லங்கள்!
பாட்டாளித் தோழர்களின் கட்டுக்கோப்பு!
உடைப்பு! எங்கும் பொருளழிப்பு! அங்கிருந்த
உடைமையெலாம் பொடியுப்பு! இந்த நேரம்
மடையனவன் ஆஷ்துரையின் சுடுவி ருப்பு!
மாடலின் கொந்தளிப்பு இருந்த தங்கே!


அதற்குப்பின் சிதம்பரனார் தீர்ப்பு! ஐயோ
அதுதானோ நீதிபதி தீர்ப்பு! பாவி
இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டிட் டானோ?
எவ்வாறு அப்படியோர் தீர்ப்பைச் சொன்னான்?
சதியான சதியதுதான்; நாற்ப தாண்டு
சிறைவாழ்வு என்றிட்டான்; அந்த மானில்
விதித்திருந்தான் அத்தீர்ப்பை சட்ட ஏடும்
விம்மிவிம்மி இதைப்பார்த்து அழுத தங்கே!


தீர்ப்பிதனைக் கண்டித்துப் பேசி டாத
தேசத்தார் யாருமில்லை! பார் தியார்
ஆர்ப்பரித்தார் “இதுதீது சூது" என்று
அழுதிட்டார்; உலகத்தில் இதுவரைக்கும்
தீர்ப்பிதுபோல் கண்டதில்லை என்று சொன்னார்!
தீர்ப்பில்லை இதன்பெயரைத் ‘தீய்ப்பு’ என்றார்;
தென்னாட்டார் கண்ணீரைப் பெருக்கிட் டார்கள்!