பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

அவர் வாசகர்களைத் துன்புறுத்துவதில்லை. வரிக்கு வரி, வாக்கியத்துக்கு வாக்கியம் எதுகை மோனைகளைப் போட்டு நம்மைத் திணற அடிப்பதில்லை. ‘பேச்சுத் தமிழ்’ என்ற பெயரால் படிக்க முடியாத கொச்சைத் தமிழைக் கையாண்டு நம்மைக் கொல்லுவதுமில்லை.

தாம் எழுதுவது படிப்பவர்களுக்கு விளங்கவேண்டுமென்னும் நோக்கத்தையே பிரதானமாகக் கொண்டு நடுநிலைமையான பேச்சுத் தமிழ் நடையைக் கையாளுகிறார்.

மனிதனுக்கு மனிதன் செய்யும் அநீதியையும் கொடுமையையும் எடுத்துக்காட்டும்போது, “விந்த”னுடைய தமிழ் நடையின் சக்தி உச்ச நிலையை அடைகிறது.

உதாரணமாக இதைப் பாருங்கள்:

செட்டியார் கடைக்கு வந்து இறங்கும் அரிசி மூட்டை, சர்க்கரை மூட்டை முதலியவைகளை யெல்லாம் சின்னசாமி கடை வாசலிலிருந்து தன் முதுகில் சுமந்து கொண்டு போய்க் கடைக்குள் அடுக்குவான். மூட்டைக்குக் காலணா வீதம், எந்தக் காலமாயிருந்தாலும் சரிதான்; சமாதான காலமாயிருந்தாலும் சரிதான் - எண்ணிக் கொடுத்துவிடுவார் செட்டியார். ஆனால், என்றைக்காவது ஒருநாள் சின்னசாமி அறுபத்து நாலு மூட்டைகளுக்குமேல் தூக்கி அடுக்கிவிட்டு, ஒரு ரூபாய்க்கு மேல் கூலி வாங்க வந்துவிட்டால் செட்டியாரின் கண்களிலிருந்து ஏனோ இரண்டு சொட்டு கண்ணீர் கீழே விழும்.

இந்தத் துக்க நிவர்த்திக்காக, அவன் கூலியிலிருந்து திருப்பதி தேவஸ்தானத்தின் தர்ம உண்டிக்கென்று செட்டியார் இரண்டணாவைப் பலவந்தமாக எடுத்துக் கொள்வார். ‘இகலோகத்தில், தான் அவன் தன்னுடன் சமத்துவமாக வாழாவிட்டாலும், பரலோகத்திலாவது வாழட்டுமே!’ என்பது செட்டியாரின் பரந்த நோக்கம்!

செட்டியாருக்குக் கண்ணீர் வருகிறது; நமக்கோ கோபம் கோபமாய் வருகிறது; ஆத்திரம் பொங்கி வருகிறது.

“விந்தன்” கதைகளைத் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றுப் படித்து மேலும் மேலும் கோபமும் ஆத்திரமும் அடைவார்க ளென்றும், அதன் பலனாகச் சமூகத்திலுள்ள அநீதிகளையும் கொடுமைகளையும் ஒழிக்க ஊக்கங் கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.