பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விதி வென்றதா?

97

“ஆமாம், போடா” என்று அலுப்புடன் சொல்லி விட்டு அவர் மேலே நடந்தார்.

“அனுப்பிவிட்டு வாப்பா, அப்பத்தான் அவருக்குப் புத்தி வரும்” என்று சொல்லிவிட்டுத் திரும்பினான் ரவி.

இந்தச்சமயத்தில் அங்கே வந்த சுப்பனின் மனைவியான குப்பி, “அம்மா ரெண்டு வைத்திலைச் சருகு இருந்தாக் கொடுங்களேன்?” என்றாள்.

இந்த விண்ணப்பம் காதில் விழுந்ததும் “ஏண்டி உனக்கு வெற்றிலைச் சருகு இல்லாமல் பல்லெல்லாம் கொட்டிண்டு போறதோ? மாட்டுக் கொட்டாயைக் கூட்டி அலம்புன்னு சொன்னேனே, அலம்பினாயோ?” என்று கேட்டுக் கொண்டே உள்ளேயிருந்த எஜமானியம்மாள் வெளியே வந்தாள்- வாழ்க்கையில் எந்த சுகத்தையுமே ஏழை விரும்பக் கூடாது என்பது அவளுடைய எண்ணம்!

“இப்பத்தான் அலம்பிட்டு வரேன், அம்மா!” என்றாள் குப்பி.

“ஓஹோ” என்று அவள் மீண்டும் உள்ளே சென்றாள். அதற்குள் கை நிறைய வெற்றிலையை எடுத்துக் கொண்டு அவளுக்கு எதிரே வந்தான் ரவி.

“உனக்கு ஏண்டா, இந்த வேலையெல்லாம்?” என்று அவன் கையிலிருந்த வெற்றிலையை வெடுக்கென்று பிடுங்க ரொம்ப ரொம்ப சிரமப்பட்டு அழுகல், பழுத்தது, உலர்ந்தது - இந்த மாதிரி வெற்றிலைகளாகப் பார்த்துப் பொறுக்கி நாலு எடுத்து அவள் குப்பியிடம் கொடுத்தாள்.

அதைப் பெற்றுக்கொண்ட குப்பி, “மகராஜியாயிருப்பீங்க!” என்று அவளை மனமார வாழ்த்தினாள்.

“அட, கடவுளே குப்பையில் போடும் வெற்றிலையைத் தான் குப்பி போட வேண்டுமென்பது கூடவா உன்னுடைய விதி!” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் ரவி.

அவன் குழந்தை உள்ளம் விதியின் கொடுமைகளை எண்ணிக் குழம்பியது.

* * *

வி.க. -7