பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உறவினர் எதற்கு?

107

வைத்ததோடு அவள் நமன் உலகம் போய்விட்டாள் - மகராஜி! அவள் எந்த உலகத்திலிருந்தாலும் அந்த உலகம் தொல்லையில்லாத உலகமாயிருக்கட்டும்.

என்னுடைய குழந்தைகளின் அழகைக் கண்டு என் அம்மா அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அவள், ஒரு நாளாவது அவர்களுக்குத் திருஷ்டி கழிக்காமலிருக்க மாட்டாள். அக்கம் பக்கத்தாரின் பார்வையினால் அந்தக் குழந்தைகளின் அழகுக்குப் பங்கம் வராமலிருக்க வேண்டுமே என்பது அவள் கவலை! - அழகு மட்டும் இருந்தால் போதுமா? அதற்காகப் பிள்ளையைப் பெற்றவர்கள் வந்து என்னுடைய பெண்களைக் கல்யாணம் செய்து கொண்டு போய்விடுவார்களா? காட்டில் மலர்ந்த மலர் போல அந்தக் குழந்தைகள் ஏழையாகிய என் வீட்டில் அல்லவா வந்து பிறந்திருக்கின்றன? அவற்றை அனுபவிப்பார் யார்? ஆக்கிய கடவுள் அழிக்கும் வரையில் அவை காலந் தள்ளுவது எப்படி?

முதல் பெண்ணை மூன்றாந் தாரமாக ஒரு முதியவருக்குக் கொடுத்து அவள் அமங்கலியாக இப்பொழுது என் அகத்துள் அஞ்ஞாத வாசம் செய்து கொண்டிருக்கிறாள். இரண்டாவது பெண்ணை ஓர் இருமல் வியாதிக்காரனுக்குக் கொடுத்தேன் - தெரியாமல் கொடுத்துவிட வில்லை - தெரிந்துதான் கொடுத்தேன் - அப்புறம் கேட்க வேண்டுமா? அவள் புகுந்ததும் அந்த வீடு ஆஸ்பத்திரியாக மாறி விட்டது. அந்த ஆஸ்பத்திரியில் அவள் ‘நர்ஸ்’ஸாக இன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மூன்றாவது பெண்தான் ரங்கா, நாலாவது பெண்ணான நளினியைப் பற்றி “இன்னும் நாலைந்து வருடங்களுக்குக் கவலையில்லை. அவளுக்கு வயது பத்துத் தான் ஆகிறது. ரங்காவுக்குத்தான் இப்பொழுது இருபத்திரண்டாவது வயது நடக்கிறது”. ஆமாம்; அவளுக்கு வயது இப்பொழுது இருபத்திரண்டுதான்! - இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஏன் ஆகவில்லை? அவளுக்கென்று இந்த உலகத்தில் எந்த ஆடவனும் இல்லவே இல்லையா? எத்தனையோ பேர் இருக்கத்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாரையாவது ஒருவரை ‘வரதட்சணை’ என்னும் பெயரால் நான் விலை கொடுத்து வாங்க வேண்டுமே! அப்படித் தானே சம்பிரதாயம் சொல்லுகிறது? அதற்கு என்னிடம் பணம் இல்லை; இல்லை யென்றால் ஏழை வாழ வேண்டாமா?