பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

விந்தன் கதைகள்

தற்சமயம் என்னுடைய கவலையெல்லாம் ரங்காவைப் பற்றியது தான். என்ன கவலையென்றால் இந்தப் பெண்ணையாவது நல்ல இடமாகப் பார்த்துக் கொடுக்க வேண்டுமே என்ற கவலைதான்.

பார்க்கப்போனால் இந்த எண்ணம் எனக்கே பைத்தியக்காரத் தனமாகத்தான் தோன்றுகிறது. முதல் இரண்டு பெண்களை மட்டும் ஏதாவது நல்ல இடமாகப் பார்க்காமலா கொடுத்துவிட்டேன்? - இல்லை. என்னுடைய நிலைமையில் அந்தக் குழந்தைகளுக்கு நான் எவ்வளவுதான் முயன்றும், அவ்வளவு அழகான சம்பந்தங்கள் தான் கிடைத்தன. ஆனாலும் அந்த மூன்றாவது பெண் விஷயத்தில் என்னமோ அப்படி மீண்டும் ஒரு சபலம்.

அன்னியர் யாரும் வந்து என்னுடன் சம்பந்தம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. ஆகவே உறவினர்களிடையே வரன் வேட்டையாட ஆரம்பித்தேன். என் தங்கையின் வீட்டில் ஒரு பிள்ளையாண்டான் இருந்தான். அதே மாதிரி என் மைத்துனருக்கும் ஒரு மகன் இருந்தான். இருவருக்கும் ரங்காவின் ஜாதகம் ஏற்ற முறையில் தானிருந்தது. என்னுடைய குறையெல்லாம் அந்த இரு வீட்டாருக்கும் தெரிந்ததுதான். அவர்கள் மனம் வைத்தால் தன் சகோதரிகளைவிட ரங்கா, கொஞ்ச நஞ்சம் சுகத்தையாவது காணமுடியும்; நானும் கல்யாண முகூர்த்தப் பத்திரிகைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடாமலிருக்க முடியும்; கொட்டு மேளத்தின் ‘கும்கும்’ என்ற முழக்கத்தையும், நாதசுரத்தின் ‘பிப்பீ’ என்ற கானத்தையும் கேட்டுக் கண்ணீர் சிந்தாமலிருக்க முடியும்; செந்தாமரைத் தண்டின் நிறத்தை நிகர்த்த கரத்தையே தலையணையாகக் கொண்டு என் மகள் தனிமையில் ஒடுங்கித் துாங்கும் போது, இறுக மூடிய அவள் கண்ணீமைகளின் ஓரத்திலே கண்ணீர்த் துளிகள் கசிவதைக் கண்டு என் நெஞ்சம், நெகிழ்ந்து உருகாமலிருக்க முடியும். இந்த ஆசையுடன் தான் பகவான் மேல் பழியைப் போட்டுவிட்டு நான் என்னால் ஆனவரை இம்முறை முயன்று பார்த்தேன்.

என் உறவினர்களில் யாரும் என்னை அழைக்காவிட்டாலும் நானே என்னுடைய வருகையை முகத்தில் அசடு வழியத் தெரிவித்துக் கொண்டு, அடிக்கடி அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தேன்; முதலில் அவர்கள் என்னுடன் முகம் கொடுத்துப் பேசாவிட்டாலும், நானே அவர்களிடம் முகம் கொடுத்துப் பேசினேன். கண்ணீரும்