பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

விந்தன் கதைகள்

கவிழ்க்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைக் கவிழ்த்து விட முயன்றவர்களில் அவனும் ஒருவன் என்று தெரியவந்தது. ஆனால் அவன் பணமும் பலமும் இல்லாதவனாயிருக்க வேண்டும். அல்லது உலகம் இன்னதென்று தெரியாதவனாயும், இதற்குமுன் ஒரு கஷ்டமும் நஷ்டமும் அறியாதவனாயும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விடுதலை அடைந்த அவன் ஒரு ரோஜாப் பூமாலையில்லாமல் ஓரிரண்டு பேர் ‘ஜே’ கோஷங்கூடப் போடாமல் என் வீட்டு வராந்தாவில் வந்து ஏன் ஒதுங்கிக் கொள்ளப்போகிறான்?

என்னையும் அறியாமல் அவனிடம் எனக்கு இரக்கம் உண்டாயிற்று. “சாப்பாடெல்லாம் ஆச்சோ?” என்று விசாரித்தேன்.

“ஆச்சு, சாப்பிட்டு இரண்டே இரண்டு நாட்கள் தான் ஆச்சு! நேற்றைக்கு முன்தினம் தான் விடுதலை அடைந்தேன்!” என்றான் அவன் சோர்வுடன்.

நான் அவனை உள்ளே அழைத்துக் கொண்டு சென்று, அம்மாவைக் கூப்பிட்டுக் கொஞ்சம் சாதம் போடச் சொன்னேன். “அவன் என்ன ஜாதியோ என்னமோ நேரே உள்ளுக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்!” என்று முணுமுணுத்துக் கொண்டே அவனுக்குச் சாதம் பரிமாறினாள் அம்மா. அவன் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

அதற்குள் மழையும் கொஞ்சம் விட்டிருந்தது. அவன் வெளியே போவதற்குக் கிளம்பினான்.

“இந்நேரத்தில் எங்கே போகப் போகிறாய்?” என்று கேட்டேன்.

“படுக்க எங்கேயாவது கொஞ்சம் இடம் பார்ப்பதற்குத்தான்!” என்றான் அவன்.

“இந்த வராந்தாவில் படுத்திருந்துவிட்டுப்பொழுது விடிந்ததும் போகலாமே?”

“என்ன சொல்வீர்களோ என்று நினைத்தேன். உங்களுக்கு ரொம்பப் புண்ணியமுண்டு. அப்படியே படுத்துக் கொள்கிறேன்” என்று ஜிப்பாவைக் கழற்றி வராந்தாவில் போட்டு அவன் படுத்துவிட்டான்.

நானும் தெருக்கதவைத் தாளிட்டுவிட்டு உள்ளே சென்று படுத்துக் கொண்டேன்.