பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

விந்தன் கதைகள்

சோலையப்பனுக்கு நான் அளித்த வாக்குறுதியை மறக்கவில்லை. எங்கள் கிராமத்துக்கு அடுத்தாற் போலிருந்த ஒரு சிற்றுார்க் கடை வீதியிலே ஒரு நல்ல இடத்தைத் தேடிப் பிடித்தேன். கண்ணாடி பீரோக்கள், குப்பிகள் முதலியவற்றை வாங்கிக் கடையை அழகாக அலங்கரித்தேன். ஒரு நூறு ரூபாய்க்குப் பட்டணத்திலிருந்து ரொட்டிகள், மிட்டாய்கள் எல்லாம் வாங்கி அவற்றில் அடுக்கினேன். சோலையப்பன் ரொட்டிக் கடை என்று ஒரு பலகையில் எழுதி, கடையின் வாசலில் தொங்க விட்டேன். பிறந்ததிலிருந்து சட்டையையே காணாத சோலையப்பனின் உடம்பையும் சட்டை தைத்துப் போட்டு மூடினேன். ‘நாம் வாங்கிய சரக்குகளின் விலை இவ்வளவு’ விற்க வேண்டிய விலை இவ்வளவு என்று சொல்லிக் கொடுத்தேன். ‘அப்பாடா! எப்படியோ அவன் விதியை மாற்றியமைத்து விட்டோம்’ என்ற திருப்தியுடன் சென்னைக்குத் திரும்பினேன்.

என்னுடைய திருப்தி நெடுநாள் நீடித்திருக்கவில்லை. நான் ஊருக்குத் திரும்பிய இரண்டு வாரங்களுகெல்லாம் சோலையப்பனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், அவன் என்னை உடனே புறப்பட்டு வரும்படி எழுதியிருந்தான். அவனுடைய அவசர அழைப்பை ஏற்றுக் கொண்டு, நானும் அவசர அவசரமாகக் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.

முதலில் சோலையப்பனின் ரொட்டிக் கடைக்குத்தான் சென்றேன் என்று சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கடையைப் பார்த்ததும் எனக்குத் துாக்கி வாரிப் போட்டது. நான் வாங்கி வைத்துவிட்டுச் சென்ற ரொட்டிகள், மிட்டாய்கள் எல்லாம் அப்படி அப்படியே இருந்தன.

“என்ன, இத்தனைநாளாக ஒன்றுமே விற்கவில்லையா?” என்று கேட்டேன்.

“அது எப்படிங்க விற்கும்?”

“ஏன், இந்தக் கிராமத்தில் ரொட்டி, மிட்டாய் தின்பவர்கள் யாருமே இல்லையா?”

“இல்லாம என்னங்க? அதோ, அந்த முதலியாரு ரொட்டிக்கடை இருக்குதுங்களே, அதிலே தினம் தினம் எம்மா வியாபாரம் ஆவுது!”

“பின்னே என்ன? உன்னுடைய கடையிலே மட்டும் ஏன் வியாபாரம் ஆகவில்லை?”