பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கதவு திறந்தது!

டாக்டர் ரங்கராவ் அந்த ஆஸ்பத்திரியில் வேலைக்கு அமர்ந்ததிலிருந்து இதுவரை எத்தனையோ பிரேதங்களைப் பரிசோதித்திருக்கிறார். ஆனால் அன்றைய தினம் பரிசோதனைக்கு வந்த பிரேதத்தைப் பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சியும் அனுதாபமும் என்றுமே அவருக்கு ஏற்பட்டதில்லை.

ஏன்?

அவருடைய உள்ளமறிந்த ஒரு ஜீவனின் பிரேதமாயிருந்தது அது!

அவன் எப்படி இறந்தான்?

‘போலீஸ் ரிப்போர்ட்’ அவருக்குப் பதில் சொல்லிற்று:

வழி நடைப் பாதையிலே, கொட்டும் மழையிலே, குளிரிலே அவன் விறைத்துக் கிடந்தான் என்று!

அவன் யார்?

***

ரசியல் கொந்தளிப்பில் குதித்து அதிகார வர்க்கத்துடன் போராடி அம்பலத்துக்கு வந்தவனல்ல; பேரும் புகழும் பெற்ற பிரமுகனல்ல; காரிருளில் ஒரு மின்னல்போல் கலைவானில் தோன்றி மறைந்த கலைஞனுமல்ல; சர்வ சாதாரணமான தொழிலாளி!- குழந்தைகள் மாம்பழத்தைச் சப்புக் கொட்டித் தின்றுவிட்டுக் கொட்டையை வீசி எறிந்து விடுவதுபோல, முதலாளிகள் அவனுடைய இரத்தத்தை உறிஞ்சிவிட்டுத் தள்ளி விட்டார்கள்!

பார்க்கப் போனால் அந்த முறையில் அறிமுகப்படுத்துவதற்குக் கூட அவன் அருகதையற்றவன். தொழிலாளிகளுக்காவது வேலை செய்வதற்கென்று ஓர் இடமுண்டு; அவர்களுடைய வேலைக்குக் கூலியும் இவ்வளவுதான் என்று நிச்சயமாக உண்டு; வசதியுடனோ, வசதியில்லாமலோ அவர்கள் வசிப்பதற்கென்று வாடகைக்காவது ஒரு சின்னஞ் சிறு அறை உண்டு; உயிர் போகாமலிருப்பதற்காவது ஓரளவு உண்டு. ஆனால் அவனுக்கோ?

இந்த உலகத்தில் எதுவுமே நிச்சயமில்லை!