பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மாட்டு தொழுவம்

141

"அவள் சாப்பிடுகிறாள், அம்மா!" என்றார் அந்தப் புண்ணியவான்.

“எத்தனை நாழியாச் சாப்பிடுவது? சமைப்பதை அப்படியும் இப்படியுமாக ஆளுக்குக் கொஞ்சம் காட்டி விட்டு, கடைசியில் எல்லாவற்றையும் அவளே விழுங்கி வைக்க வேண்டுமென்றால் அத்தனை நாழிதான் ஆகும்!” என்றாள் அவள்.

எப்படியிருக்கிறது, நியாயம் ? நமது நாட்டில் சாதாரணமாக எல்லாப் பெண்களுமே கடைசியில் சாப்பிடுவதுதான் வழக்கம். நானும் அப்படித்தான். எல்லோருக்கும் போக ஏதாவது மிஞ்சினால் உண்டு; இல்லையென்றால் இல்லை. அதிலும், கணவனுக்கு வேண்டியவரை வைத்துப் பெருமையடைவதில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கே ஒரு தனி ஆனந்தம். இந்த அனுபவத்தை என் மாமியாரும் மருமகளாயிருந்தபோது அறிந்துதான் இருக்கவேண்டும். ஆனாலும் அவள் ஏன் இப்பொழுது இப்படிப் பேசுகிறாள்?-அவர் உழைத்துவிட்டு வருகிறாராம்; நான் உழைக்காமலிருக்கிறேனாமே?

* * *

ப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள். என்னால் பொறுக்க முடியவில்லை. மாதம் ஆக, ஆக எனக்கு வேலை செய்யமுடியவில்லையே! என்ற குறை; மாமியாருக்கோ 'வேலை செய்யவில்லையே!’ என்ற குறை. இந்தக் குறைகளுக்கு இடையே எனக்கு ஏழாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. எல்லாப் பெண்களும் முதல் பிரசவத்துக்குத் தான் பிறந்தகம் செல்வது வழக்கம். இந்த விஷயத்தில் மட்டும் என் மாமியாருக்கு வேறு யாருக்கும் இல்லாத விசாலமான மனம். அவள் பிரசவத்துக்குப் பிரசவம் என்னைப் பிறந்தகத்துக்குத்தான் அனுப்பி வைப்பாள்.

அதே கதிதான் எங்கள் வீட்டு மாட்டுக்கும். பிரசவத்துக்குப் பிரசவம் அதையும் கிராமத்துக்கு ஒட்டி விடுவார்கள்-நியாயம்தானே? பால் மறத்துப்போன அந்த மாட்டுக்கு யாராவது தண்டத் தீனி போட்டுக் கொண்டிருப்பார்களா?

அதனுடைய நிலைதான் என்னுடைய நிலையும்-வீட்டுக் காரியங்களையோ என்னால் இப்பொழுது செய்ய முடிவதில்லை. பின் ஏன் எனக்கு வெட்டிச் சோறு?