பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாருக்குப் பிரதிநிதி?

187



ஸ்ரீமான் அன்னவிசாரம் எம். எல். ஏ. ஒரு காலத்தில் வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அவர் தம்முடைய மனைவியை மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, வேறு வழியின்றி நகரிலிருந்த சேவாசிரமத்தில் சேர்ந்தார். அந்த ஆசிரமத்தில் அவருக்கு மாதாமாதம் ரூபாய் ஐம்பது சம்பளம் கிடைத்து வந்தது. அதை அவர் வெளியே சொல்லிக் கொள்வதில்லை. அப்படிச் சொல்லிக் கொள்வது தம்முடைய தொண்டுக்குத் தாமே மாசு கற்பித்துக் கொள்வதாகுமென்று அவர் நினைத்தார்.

அந்த ஆசிரமத்தில் பொதுஜனச் செல்வாக்குள்ள ஒரு நண்பரின் சிநேகம் ஸ்ரீ அன்னவிசாரத்துக்குக் கிடைத்தது. நண்பர் நல்ல பேச்சாளர்; அடிக்கடி பல பொதுக் கூட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வார். அவர் சமயம் வாய்க்கும் போதெல்லாம் ஸ்ரீ அன்னவிசாரத்தைப் பற்றிச் சக்கைப் போடு போட்டு வந்தார். ஸ்ரீ அன்னவிசாரத்தின் தன்னல மற்ற சேவையைப் பற்றியும், தேசத்துக்காக அவர் தம் உடல், பொருள், ஆவி மூன்றையும் அர்ப்பணம் செய்திருப்பதைப் பற்றியும் அந்த நண்பர் சாங்கோபாங்கமாக எடுத்துச் சொல்லி வந்தார்.

இந்த விஷயத்தில் ஸ்ரீ அன்னவிசாரத்துக்கு மட்டும் அடிக்கடி சந்தேகம் வந்துவிடும். அவ்வாறு சந்தேகம் வரும் போதெல்லாம் அவர் தம் உடலை ஒரு முறை தடவிப் பார்த்துக் கொள்வார்; அது என்றும் இருப்பது போல் வாடாமல் வதங்காமல் இருக்கும். அதற்குள் ஆவி இருக்கிறதா?’ என்று தெரிய வேண்டாமா? அதற்காக ஒரு முறை அவர் தம் அங்க அவயங்களையெல்லாம் அசைத்துப் பார்த்துக் கொள்வார்; அதன் மூலம் ஆவியும் இருப்பதாகத் தெரிய வரும். பொருளைத்தான் அவர் பார்ப்பதேயில்லை. ஏனெனில், அதுதான் அவரிடம் கிடையவே கிடையாதே!

இருப்பதைச் சொல்லட்டும், இல்லாததைச் சொல்லட்டும்-அந்தப் பக்கத்து ஜனங்கள் அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படுவதேயில்லை. இத்தகைய மகாஜனங்களின் அசட்டுத்தனத்தினாலும், நண்பருடைய பிரசார பலத்தினாலும் ஸ்ரீ அன்னவிசாரம் எம்.எல்.ஏ. ஆனார். கனம் அங்கத்தினரானதும் ஸ்ரீ அன்னவிசாரத்தின் கவலை ஒருவாறு தீர்ந்தது. மாமனார்வீட்டிலிருந்த தம்முடைய மனைவியை அழைத்துக் கொண்டதோடு, இன்னொரு