பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

விந்தன் கதைகள்


நல்லதா? - சீ, வேண்டாம்; வேண்டவே வேண்டாம். என்ன இருந்தாலும் நம்முடைய புத்தி இப்படிக் கீழே போக வேண்டாம். நாளுக்கு நாள்முன்னேற வேண்டிய நாம், அப்படி ஏதாவது இப்போது கேட்டு வைத்தால் அது சிலருக்கு பிடிக்கும்; சிலருக்குப் பிடிக்காது. அதன் பயனாக ஒரு வேளை மந்திரிப் பதவி கிடைக்காமலே போனாலும் போய்விடலாம். நமக்கு எதற்கு வீண் வம்பு? ‘எடுத்ததற்கெல்லாம் கையைத் தூக்கி னோம், வீட்டுக்குப் போனோம் என்று இருப்பதே மேல்!”

இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் ஸ்ரீ அன்ன விசாரம் 'அசல் தரித்திர'ங்களைப் பற்றிய விசாரத்தை விட்டார். சட்ட சபையில் ‘சிவனே!' என்று உட்கார்ந்து கொண்டிருந்து விட்டு, வீடு திரும்பினார்.

அன்றிரவு அவருக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. காரணம், அவருடைய மனம் ‘மந்திரியின் மகாத்மிய'த்திலேயே லயித்து விட்டதுதான்

* * *

மறுநாள் காலை ஸ்ரீ அன்னவிசாரம் படுக்கையை விட்டு எழுந்திருப்பதற்கும், அந்த அசல் தரித்திரங்க'ளில் ஒன்று வந்து ஜன்னல் வழியே தலையை நீட்டுவதற்கும் சரியாயிருந்தது.

"யாரடா, அது?’’

"நான்தான் குப்பனுங்க"

"குப்பனா"

“ஆமாங்க, நேத்து வந்து குடிசையைப் பிரிச்சுப், போட்டுட்டாங்கன்னு முறையிட்டுக்கிட்டோ மில்லே, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனுங்க"

"ஒஹோ இப்போது ஏன் இங்கே வந்தாய்?”

"மேலிடத்தில் எங்களைப் பற்றி ஏதாச்சும் சொன்னிங்களான்னு கேட்கத்தான் வந்தேனுங்க!"

"மேலிடம் என்னடா மேலிடம் எனக்கு மூளைகீளை ஒன்றும் கிடையாதா? நாலு பேருக்கு நல்ல தென்று எண்ணி ஒரு காரியம் செய்தால், அது ஒரிருவருக்குக் கெடுதலாகவும் முடியுந்தான்! அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா, என்ன?-போ, போ"