பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

விந்தன் கதைகள்

கொடிக்கு ஆனந்தம் அதிகம் போலிருக்கிறது; இல்லாவிட்டால் அது ஏன் அவளை அப்படி ஏமாற்றிவிட்டு அததனை உயரத்தில் போகவேண்டும்? அவளும் அதை விடவில்லை; அதுவும் அவளை விடவில்லை - இந்த வேடிக்கையைப் பார்த்துத் தானோ என்னவோ அவளுடைய கைவளையல்கள் கலகல'வென்று நகைத்தன.

அதென்னமோ, இந்த ஆண்களுக்குப் பெண்களைக் கண்டாலே ஒருவிதமான பச்சாதாபம் உண்டாகிவிடுகிறது அதற்கு நான் மட்டும் விதி விலக்கா, என்ன? எனக்கும் அவள் மீது பச்சாதாபம் உண்டாகத்தான் செய்தது. திண்ணையை விட்டு எழுந்து சென்றேன்; அந்தக் கொடியைப் பிடித்து இழுத்து அதிலிருந்து முல்லை மொட்டுக்களை யெல்லாம் பறித்து அவளிடம் கொடுத்து விட்டுத் திரும்பி வந்தேன்.

அப்பொழுது அவள் என்னைப் பார்த்த பார்வை நன்றியுடன் பார்த்ததாயில்லை; அதென்னமோ மாதிரியாயிருந்தது - அவள் ஏன் என்னை அவ்வாறு பார்த்தாள்?

* * *

கோடை விடுமுறை மணிக் கொருதரம் வராவிட்டாலும் மாதத்திற் கொருதரமாவது வரக்கூடாதா? அது தான் இல்லை. வழக்கம் போல் அது வருடத்திற்கொரு முறைதான் வந்தது; நானும் வழக்கம் போல் என்தங்கையின் கிராமத்திற்குச் சென்றேன் - சொல்ல மறந்து விட்டானே அந்த முல்லைக் கொடியாளும் அக் கிராமத்தில் தான் இருந்தாள்.

நான் போன சமயம் என் தங்கை வீட்டில் இல்லை. கதவு மூடியிருந்தது. சுற்று முற்றும் பார்த்துத் திருதிரு வென்று முழித்துக் கொண்டிருந்தேன். அவள் வந்தாள். யார்? என் தங்கையல்ல; அன்று பார்த்த அதே முல்லைக் கொடியாள்தான்

யார் முதலில் பேசுவது?

சிறிது நேரம் இருவரும் மெளனமாயிருந்தோம்.

இப்படியே எவ்வளவு நேரம் சும்மா இருக்க முடியும்? நான்தான், 'இவர்கள் எங்கே?’ என்று முதலில் அவளை விசாரித்தேன்.

‘என்னைக் கேட்டால்?' என்று கேட்டுவிட்டு அவள் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.