பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

விந்தன் கதைகள்

சின்னஞ் சிறு வயதிலே எத்தனையோ தாய்மார்கள், 'மஞ்சள் குங்குமத்தோடு என்னை அவருக்கு முன்னால் கொண்டு போய்விடு, பகவானே" என்று வேண்டிக் கொள்வதை நான் கேட்டிருக்கிறேன். அந்த வேண்டுகோளில் பொதிந்து கிடந்த பொருள் இப்பொழுதல்லவா எனக்குத் தெரிகிறது!

இந்த உண்மை தெரிந்ததும் நானும் அப்படியே பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். வாழ்வதற்காக அல்ல; சாவதற்காக!

என்னுடைய பிரார்த்தனை பலிக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் என் கணவரை யமன் வந்து அழைத்துச் சென்ற போது, அந்தப் பாழும் கடவுள் எதிர்பாராத விதமாகத் தோன்றி அவனைக் காலால் உதைக்கவில்லை!

அன்றிலிருந்து நான் அனாதையானேன். அத்துடன் சம்பிரதாயப்படி என் மகனுக்கு நான் பாரமாயிருப்பது போய், அவன் எனக்குப் பாரமானான்.

இந்த லட்சணத்தில் தான் என் வாழ்க்கையின் மூன்றாம் அத்தியாயம் ஆரம்பமாகியிருக்கிறது. எனக்கோ குழந்தை குட்டியுடன் குடித்தனம் செய்வதைத் தவிர வேறொன்றும் தெரியாது. என் அப்பாவும் அந்தக் காலத்தில் எனக்கு அவ்வளவு தெரிந்தால் போதுமென்று தானே சொன்னார்?

அவருடைய வாக்கின்படி இப்பொழுது யாருடைய வரும்படியைக் கொண்டு நான் குடித்தனத்தை நடத்துவது? என்னை நானே காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லாத எனக்கு யார் இப்போது உதவப்போகிறார்கள்? இந்தக் கதிக்கு ஆளாக நான் என்ன பாவம் செய்தேன்?