பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

விந்தன் கதைகள்

நான் துணிந்து விட்டேன். "வான வீதிக்கு வேண்டுமானால் போக வேண்டாம்; இந்தச் சிட்டுக் குருவி போல் இங்கேயே மாமரத்துக்கும் பூமிக்குமாகப் பறந்து கொண்டிருந்தால் என்ன?” என்று எண்ணிக் கீழே இறங்குவதற்காகச் சிறகடித்தேன். ஆனால், என்ன ஏமாற்றம் என்னால் ஓர் அடிகூடப் பறந்து செல்ல முடியவில்லை; 'பொத்'தென்று கீழே விழுந்து விட்டேன்.

உடம்பில் பலமான அடி, வேதனையைத் தாங்க முடியவில்லை என்னால், 'கீ, கீ' என்று கத்த ஆரம்பித்துவிட்டேன்.

அப்போது யாரோ ஒரு சிறுமி அங்கே வந்தாள்-அவள் அந்த பங்களாவில் குடியிருப்பவர்களைச் சேர்ந்தவள் போலிருக்கிறது . என்னுடைய கதறலைக் கேட்டதும் அவள் நான் இருக்கும் இடத்திற்கு ஓடோடியும் வந்தாள். என்னைக் கண்டதும் அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ஆனந்தம் உண்டாகி விட்டதோ, தெரியவில்லை. "அக்கா கிளி, கிளி, கிளி அக்கா கிளி, கிளி, கிளி!" என்று அவள் கத்தினாள்.

உடனே அந்த பங்களாவிற்குள்ளிருந்து இன்னொரு பெண், “எங்கேடி, எங்கேடி?" என்று கேட்டுக்கொண்டே ஓட்டமாய் ஒடி வந்தாள்.

அவ்வளவுதான்; அடுத்த கணம் நான் அவர்களால் கைது செய்யப்பட்டேன்.

என்னுடைய அறியாமையால், ஆத்திரத்தால், அவசரத்தால், எனக்கு இயற்கையாகவே கிடைத்திருந்த சுதந்திரம் அன்று அநியாயமாகப் பறிக்கப்பட்டுவிட்டது!

"விடுதலை, விடுதலை, விடுதலை!" என்று நான் கதறும் படியாகிவிட்டது!

அவர்கள் என்னமோ, என்னிடம் எவ்வளவோ அன்பு காட்டத்தான் செய்தார்கள். பழமும் பாலும் பரிந்து பரிந்து ஊட்டினார்கள். அடிக்கொரு தரம் என்னைத் தடவித் தடவிக் கொடுத்தார்கள். ஆத்திரத்தால் நான் வெடுக், வெடுக் கென்று கடிப்பதை அன்பினால் முத்தமிடுவதாக அந்த அப்பாவிகள் நினைத்துக் கொண்டார்கள்!

ஆனால் எனக்கோ பழமும் வேண்டியிருக்கவில்லை; பாலும் வேண்டியிருக்கவில்லை. யாருக்குவேண்டும், இந்தப் பழமும் பாலும?