பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

விந்தன் கதைகள்

ஒன்றும் வேண்டாம்; எச்சில் சோறும், எலும்பும், ‘நன்றியுள்ள பிராணி என்ற பட்டமும் கிடைத்தால் போதும்!'

சீசீ; அதுவும் ஒரு ஜன்மமா!

அதை அவிழ்த்து வெளியே விடுகிற மாதிரி என்னையும் வெளியேவிட்டால்...... ?

அந்த நாயைப் போல் நான் திரும்பியா வருவேன், அடிமையாயிருக்க? "ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!" என்று ஆகாய வீதியை நோக்கிக் கம்பி நீட்டிவிட மாட்டேனா!

* * *

ன்றொரு நாள் அந்தச் சிறுமிகள் இருவரும் என்னிடம் வந்து, "ரங்க ரங்க ரங்க ரங்க ரங்கா அக் அக் கக் கக் கா!" என்று கூச்சலிட்டனர்.

நானும் அப்படியே சொன்னேனோ இல்லையோ, அவர்களுக்கு ஒரே குஷி!

ஏன் தெரியுமா? அவர்கள் எனக்குப் பேசக் கற்றுக் கொடுத்தார்களாம்; நான் உடனே பேசக் கற்றுக்கொண்டு விட்டேனாம்!

என்ன அசட்டுத்தனம் எனக்கிருந்த வெறுப்பில் நான் அவர்களுக்கு அழகு அல்லவா காட்டினேன்? அதற்குக் கோபித்துக் கொள்வதற்குப் பதிலாக இப்படி ஆனந்தப் படுகிறார்களே!

இப்படி எண்ணி நான் வியந்து கொண்டிருந்த போது, “அக்கா இந்தக் கிளிக்கு இப்போது இறக்கைகள் வளர்ந்து விட்டன; கத்திரிக்கோல் கொண்டு வருகிறேன், வெட்டி விடுகிறாயா?" என்றாள் தங்கை.

எனக்குப் பகீரென்றது. "அடி பாவிகளா" என்று சபித்தேன்.

நல்ல வேளையாக அக்கா அதற்கு ஒப்பவில்லை. "இறக்கைகள் வளர்ந்த பிறகுதான் கிளி பார்ப்பதற்கு அழகாயிருக்கிறது. அதை வெட்டிவிட்டால் அவலட்சணமாய்ப் போய்விடாதோ?" என்றாள்.

அப்பாடி ‘பிழைத்தேன்!’ என்று நான் பெருமூச்சு விட்டேன்.